முக்கியச் செய்திகள் சினிமா

நாயகனை நினைவுக்குக் கொண்டு வந்த வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், அப்பு குட்டி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது.

வறுமையில் வாடும் குடும்பத்தின் மூத்த மகனான முத்து ( சிலம்பரசன் ) தன்னுடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அங்குள்ள ஒரு முள் காட்டில் வேலை செய்து வருவார். ஒரு சிறிய பிரச்சனை காரணமாகத் தனது ஊரை விட்டு வெளியேறும் சிம்பு மும்பையில் தனது மாமா வேலை செய்யும் பரோட்டா கடையில் வேலைக்குச் சேர்வார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எதுவும் தெரியாமல் மும்பைக்கு வரும் சிம்பு அங்கு நடக்கும் கோஷ்டி (Gang) பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்வார். ஒரு கட்டத்தில் பிரச்சினைகள் எதுவும் வேண்டாம் என முடிவு செய்யும் சிலம்பரசன் மும்பையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்வார். ஆனால் தப்பிக்க முடியாமல் மும்பையின் முக்கிய தாதாவிடமே வேலைக்கு சேர்வார். இதற்கு இடையில் காதல், கல்யாணம் சில மோதல் எல்லாம் ஏற்படும்.

கிராமத்தில் இருந்து வரும் முத்து எப்படி மும்பையின் டான் அதாவது முத்து பாய் ஆகிறார் என்பதே வெந்து தணிந்தது காடு படத்தின் கதை. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான இரண்டு படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

வழக்கமான மும்பை கேங்ஸ்டர், துப்பாக்கி, கத்தி இப்படி தமிழ் சினிமா இதுவரை பார்த்த அதே டெம்ப்லேட்களை சற்று மாற்றி தனக்கு ஏற்ற ஸ்டைலில் உருவாக்கியுள்ளார் கௌதம் மேனன். நாயகன், நெஞ்சினிலே, புதுப்பேட்டை மாதிரியான கதைகள் இப்படத்தைப் பார்க்கும் போது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த படத்திற்காக நடிகர் சிலம்பரசன் தனது உடல் எடையைக் குறைத்துச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காதல், ஆக்‌ஷன் காட்சிகள் என படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இந்த படத்தை சுமந்து சென்றுள்ளார் சிலம்பரசன். அதிலும் 19 வயது பையனாகக் கதைக்கு ஏற்ப நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றி ஒரு வித்தியாசமான பாணியை சிலம்பரசன் கடைப்பிடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை தான். ஸ்லோவாக நகரும் காட்சிகளையே ரசிக்கும் படியான காட்சிகளாக அவரது பின்னணி இசை மாற்றி விடுகின்றன. குறிப்பாகப் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் பின்னணி இசை பெரிய பலமாக உள்ளது.
நாயகி சித்தி இட்னானி தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

அதே போல அம்மாவாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  உள்ளார். படம் முழுவதும் நிறையக் கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவில் உள்ளது. அப்படி சரவணன் என்னும் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார் அப்பு குட்டி. குறைந்த காட்சிகளில் வந்தாலும் ஒரு பவர் புல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜாபர் சாதிக்.

முதல் பாதி காதல், பிரச்சினைகள் எனச் சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் தான் சிலம்பரசன் எப்படி மும்பையின் தாதாவாக மாறுகிறார் என்பது வருகிறது. வழக்கமான கேங்ஸ்டர் படத்தைப் போலவே இந்த படமும் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய மைனசாக உள்ளது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதே நேரத்தில் சிம்புவின் வித்தியாசமான நடிப்புக்காக இந்த படத்தை நிச்சயம் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம். ரஜினிகாந்திற்கு ஒரு பாஷா, கமல்ஹாசனுகு ஒரு நாயகன், அஜித்துக்கு ஒரு பில்லா போல் சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூடானது தேர்தல் களம்: விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

Niruban Chakkaaravarthi

இன்னுயிர் காப்போம் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

Web Editor

“தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தனிச்சிறப்பானது!” ராகுல் காந்தி புகழாரம்!

Halley Karthik