பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பேரணியாக சென்றதும் புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து மூத்த உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன்பிறகு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களும் உறுப்பினர்களும் புதிய நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்றனர்.
நாடாளுமன்ற அலுவலர் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பிரதமருடன் புதிய நாடாளுமன்றத்துக்கு அணிவகுத்து சென்றனர்.
இதேபோல மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் ராகுல் காந்தி, கவுரவ் கோகாய் உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய நாடாளுமன்ற கட்டத்துக்கு சென்றனர். அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்திய அரசியல் சட்ட புத்தகத்தை எடுத்துச் சென்றார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பகல் 1.15 மணியளவில் மக்களவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது.







