370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் அமைதி நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் முத்தலாக் முறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி இஸ்லாமிய தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் நீதி வழங்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். மாற்றுப் பாலினத்தவர்களுக்கு நீதி வழங்கும் சட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் சட்டம் போன்றவையும் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த நாடாளுமன்றத்தில் தான் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய ஆற்றல், விழிப்புணர்வு மூலம் இந்தியா மீண்டெழுந்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இதன்மூலம் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்று கூறினார்.முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது நமது பெருமை என்றும், இந்தியாவில் இளைஞர்களின் சக்தி பெரியதாக உள்ளது. அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகில் திறமைவாய்ந்த மனித சக்தியின் தேவை உள்ளது என்றும், இந்தியா அந்த சக்தியை பயன்படுத்தி முன்னேறி வருகிறது என்றும், இந்தியர்கள் எங்கு சென்றாலும் நன்மையை விளைவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். மேலும் பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அரசியல் சாசனத்துக்கு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில்தான் வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை காணப் போவதாகவும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் உறுதிப்பாட்டுடன் புதிய நாடாளுமன்றத்துக்கு செல்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.