மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தன் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் ராமநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, பூட்டியிருந்த வீட்டில் இருந்து பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர்கள் மாரிசெல்வம், கவிதா தம்பதி. இவர்கள் பிரியாணி கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், கவிதா நடத்தையின் மீது மாரிசெல்வத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 30-ம் தேதி கோவையில் பிரியாணி கடை திறக்க வேண்டும் என மாரிசெல்வம், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி கவிதாவை அழைத்து கொண்டு கோவை சென்றுள்ளார். பின்னர் அங்கு விடுதி ஒன்று வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். ஆனால் மறுநாளே கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு கவிதாவை அழைத்து கொண்டு மாரிசெல்வம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு செல்வதற்காக கணவன் மனைவி இருவரும் பச்சிளம் குழந்தையை எடுத்து கொண்டு நாகர்கோவில் விரைவி ரயிலில் கோவை சென்றுள்ளனர். மதுரை – திண்டுக்கல் இடையே ரயில் சென்றபோது, கணவன் – மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கணவர் மாரிசெல்வம் தனது பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.
பின்னர் மனைவி கவிதாவையும் அடித்து துன்புறுத்தி ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்தும் கவிதாவை தாக்கியதால் அவர் மயக்கமடைந்தார். உடனே அவரை அறையிலேயே வைத்து பூட்டி விட்டு மாரிசெல்வம் தப்பி ஓடியுள்ளார். இதனிடையே, மயக்கம் தெளிந்த கவிதா கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நடந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தப்பி ஓடிய மாரிசெல்வத்தை கைது செய்தனர். மேலும் பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்றது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தந்தையே தனது பச்சிளம் குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.