கேரளாவில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த பி.டி.7 காட்டு
யானையை 3 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தியானையை வனத்துறையினர் பிடித்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பி.டி.7 என
அழைக்கப்படும் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், சாலைகளில் செல்லும் வாகனங்களை தொடர்ந்து துரத்துவதும், வாகனங்களை சேதபடுத்துவதுமாக இருந்து வந்தது. யானையின் அட்டகாசம் அதிகரித்த நிலையில் இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் யானையினை பிடிக்க விக்ரம், பரதன், சுரேந்தர் என 3 கும்கி
யானைகள் வரவழைக்கபட்டு யானையினை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தோனி அருகே மூண்டூர்- தோனி இடையிலான வனப்பகுதியில் யானையின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் யானையினை 2 மயக்க ஊசி அடங்கிய துப்பாக்கியினால் சுட்டனர். இதனை அடுத்து மயக்கதுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற நிலையில் 3 கும்கி யானைகள் சுற்றி வளைத்ததன் காரணமாக யானை வேறு இடத்திற்கு செல்ல முடிவில்லை.
இதனை அடுத்து யானையின் கால்களை சங்கிலியால் கட்டப்பட்டு, அதன் முகம் துணியினால் மூடப்பட்டது. மேலும் யானையை இங்கிருந்து கொண்டு செல்ல லாரி வரவழைக்கப்பட்டது. 3 கும்கி யானைகள் இருபுறமும் தள்ளியும், மற்றொரு கும்கி யானை யானையின் பின்புறம் தள்ளியும் லாரியில் ஏற்றினார்கள்.
லாரியில் ஏற்றப்பட்ட பி.டி.7 யானை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. யானை அங்கு தங்குவதற்கு தற்காலிகமாக கூடாரம் அமைக்கபட்டது. யானை பிடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







