‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் ‘சிறந்த ஆவணப்பட குறும்பட’ பிரிவில் ஆஸ்கார் விருது வென்றதை அடுத்து, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. வண்ணமயமான அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கும், பாகன்களுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண குறும்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படமும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதையடுத்து, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் ஆஸ்கார் விருது வென்றதை இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த ரகு என்ற யானை முதுமலை யானைகள் காப்பகத்தில் இருபப்தை அறிந்து, நீலகிரி ,மாவட்டம் முதுமலைக்கு சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் தற்போது அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுற்றுலாப் பயணி ஒருவர், யானைகளைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. “இது ஒரு சிறந்த தருணம். இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. யானை எனக்கு மிகவும் பிடித்த விலங்கு. அதனுடைய வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்ட படம் ஆஸ்கார் விருதை வென்றது எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
மற்றொரு வெளிநாட்டு சுற்றுலாப்பயணி பேசுகையில் , “நான் லண்டனில் இருந்து வந்திருக்கிறேன். நாங்கள் இங்கு வந்திருந்த போது, நேற்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விழாவில், இங்கிருந்த இரண்டு குட்டி யானைகளை வைத்து எடுக்கப்பட்ட ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றிருப்பதை அறிந்தோம். இந்த நேரத்தில் அந்த யானைகளை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று பெருமிதமாக கூறினார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகள் முகாம் ஆகும். இந்த முகாம் 105 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த முகாமில் 28 யானைகள் உள்ளன மற்றும் இது மோயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட இந்த யானைகள் முகாமில், பொம்மன், பெள்ளி தம்பதியினரால் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குட்டி யானைகள் குறித்து படம்பிடிக்க, படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் 5 ஆண்டுகள் தங்கியிருந்து, இந்த ஆவணப்படத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா