பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல் என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, இதில் ஆளுநருக்கும் வேறுபட்ட கருத்து இருக்காது என தெரிவித்தார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை
சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செயலாளர்
கார்த்திகேயன், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி வீழிநாதன், பல்கலைக்கழக
துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் தங்கப்பதக்கம் பெற்ற 359 மாணவர்கள் உள்ளிட்ட 19,363 மாணவர்களுக்கு
பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோர் சாதாரணமானோர் அல்ல என்றும் வேலைபார்த்துக்கொண்டே மேல் படிப்பு படிப்பவர்கள் தான் திறந்தநிலை பல்கலைக்கழக
மாணவர்கள் என்றும் தெரிவித்தார்.
இன்னும் 3 நாளில் பணி ஓய்வு பெற உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர்
பார்த்தசாரதிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்த அமைச்சர் பொன்முடி,
பட்டம் பெறுவதுடன் கல்வி நிறைவடையாது என்றும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து
கற்றுக்கொண்டே இருப்பது தான் கல்வி என்றும் பேசினார்.
ஆளுநருடன் பல பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம் பெண்களின்
எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி, பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல் என்றும் இதில் ஆளுநருக்கும்
வேறுபட்ட கருத்து இல்லை என்றும்,
ஆளுநரும் பெண்கள் அதிகளவில் கற்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் கூறினார்.
படிப்பதே வேலைக்காகத் தான் என்றும் வேலைவாய்ப்பே முதன்மையாக
இருப்பதாகவும்,படிக்கும் மாணவர்களின் வருங்கால தேவைகளை நிறைவேற்றவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சருடன் SIET மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் காரணமாக
திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை சற்று தள்ளி வைக்குமாறு ஆளுநரிடம்
கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு ஒத்துழைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
உயர்கல்வியின் பொற்காலம் இது என்று பேசிய அமைச்சர் பொன்முடி, தானும், தன்
மனைவியும் தொலைதூரக்கல்வி பயின்றவர்கள் தான் என்றும், அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்புகளை அங்கீகரிக்க UGC மறுத்துவிட்ட
நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளை தொடர்ந்து நடத்த ஆவன செய்யுமாறு UGC-க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்த வேண்டும் என்றும்
மேடையிலேயே வேண்டுகோள் விடுத்தார்.
பொறியியல் படிப்புகளையும் தொலைதூரக்கல்வி மூலம் திறந்தநிலை பல்கலைக்கழகம்
வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம், அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.




