கடந்த மூன்று ஆண்டுகளில், அதிமுக ஆட்சி தமிழ்நாட்டை சீரழித்து வைத்திருந்தது என்றும், அதை தற்போது திராவிட மாடல் ஆட்சி சரிசெய்து வருகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தரின் மகன் வெற்றிச்செல்வன் மற்றும் ஜெயராமன் என்பவரின் மகள் நித்யவதியின் திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்து வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான், காந்தி இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சுந்தர், 1969 முதல் இன்றுவரை கழகத்தின் உறுப்பினராக உள்ளார். அவர் 5வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால், மாவட்டச் செயலாளராக எப்படி பணியாற்றியுள்ளார் என்பதை உணர்த்துகிறது. ஆகவே கட்சியில் முழுமனதோடு உழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடிவரும். சுந்தரும் நானும் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினரானோம். ஆகவே நானும் அவரும் ஒரே பேட்ச் மேட்.
மணமகன் வெற்றிச்செல்வன் சாலவாக்கம் பகுதியில் ஒன்றிய இளைஞர் அணி துணை
அமைப்பாளராக உள்ளார். இதைக்கூட வாரிசு அரசியல் எனக்கூறுவார்கள். எங்களுக்கு வாரிசு உள்ளது. ஆகவே அவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில், அதிமுக ஆட்சி தமிழ்நாட்டை சீரழித்து வைத்திருந்தது. அதை தற்போது திராவிட மாடல் ஆட்சி சரிசெய்து வருகிறது” என்று பேசினார்.








