தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடு பணிகளும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் இன்று தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது விஜய் ஆட்சியமைக்க உரிமைக்கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்.
முன்னதாக இன்று காலை தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸின் 5 இடங்களை சேர்த்து சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் தவெகவிற்கு இன்னும் இடங்கள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக நாளை விஜய் பதவியேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மெஜாரிட்டிக்கான முழு எண்ணிக்கை கொண்ட பட்டியலை தவெக கொடுக்கவில்லை என்றும் அதனால் கவர்னர் அழைப்பு விடுப்பதை தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியாக இருந்தாலே ஆளுநர் அழைப்பு விடுப்பது மரபு. அதற்கு மாறாக ஆளுநர் நடந்து கொள்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.







