பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடி வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தாக்குதலில் இருந்து 4 காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே பிரபல ரவுடியை அழைத்து வந்த காவலர்கள் இருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி! துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது சீருடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தைப் பேரழிவில் நிறுத்தியுள்ள ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வரே?
சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் ஆட்சியை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வன்முறைக் களமாகவும் ரவுடிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக ஆட்சி தமிழக மக்களால் அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை!”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.






