முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

மதிமுக கடந்த தூரமும் கடக்க வேண்டிய பயணமும்


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

தமிழ்நாடு அரசியல் கட்சிகளில் தவிர்க்க முடியாத கட்சியாக இருப்பது மதிமுக. 1990களின் தொடக்கத்தில் மதிமுக ஏற்படுத்திய அரசியல் தாக்கம் மிகப்பெரியது. அரசியல் அரங்கில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் செல்வாக்கை பெருமளவு இழந்திருந்தன. திமுக – அதிமுகவை தாண்டி ஒரு கட்சியால் தமிழ்நாடு அரசியலில் செல்வாக்கு செலுத்தவே முடியாது என்று இருந்த காலம் அது. அதாவது, திமுகவில் இருந்து பிரிந்த அதிமுகவை உருவாக்கி, தொடர்ச்சியாக 3 முறை வலுவான ஆட்சியை எம்.ஜி.ஆரின் அழுத்தமாக பதிவு செய்த பிறகு ஜெயலலிதா அசுற பலத்துடன் அரசியல் தனது ஆரம்ப காலத்தை தொடங்கி இருந்தார். எம்.ஜி.ஆரின் பிரிவால் ஏற்பட்ட உடைப்பிலிருந்து திமுகவை கட்டமைத்தும், ஜெயலலிதாவுக்கு எதிராக புதிய அரசியல் வியூகத்தை வகுக்கத் தொடங்கி இருந்த கருணாநிதிக்கு மீண்டும் ஒரு கட்சி பிளவை சந்திப்பது என்பது தர்ம சங்கடமாகவே இருந்தது. அந்த தர்ம சங்கடத்தை வைகோ ஏற்படுத்தினார். எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கத்தை விட திமுகவில் ஒரு பிரளய பிளவை வைகோ உருவாக்கினார்.

வாரிசு அரசியலுக்கு எதிராகவும், ஈழ ஆதரவிற்காகவும் வைகோ முன்வைத்த அந்த அரசியல் பிரவேசம் கருணாநிதியையும், தமிழ்நாடு அரசியல் கட்சிகளையும் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்க வைத்தது. ஈழத்திற்கான ஆதரவு நிலைப்பாட்டால் தனது ஆட்சியை கருணாநிதி இழந்திருந்த சமயம் அது. அந்த நேரத்தில், திமுக மீதான குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில் வைகோ நிகழ்த்திய அரசியல் பிரவேசம் திமுகவிற்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது.    மதிமுக தொடங்கப்பட்டு 30-வது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் சில அதிருப்திகள் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

வைகோ தவறவிட்ட வாய்ப்புகள்:
மதிமுகவின் நிலையை இரண்டு வகையில் பிரித்து பார்க்கலாம்.
1. அரசியல் இருப்பை தக்க வைத்தல்.
2. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
இந்த இரண்டு புள்ளிகளிலும் மதிமுகவின் நிலையை பார்த்தால், தொடக்கத்தில் கொடுத்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாத சூழல் மதிமுகவில் உள்ளது. ஈழ விடுதலைக்காக 90-களில் வைகோ கொடுத்த அரசியல் அழுத்தத்தையும், ஈழ விடுதலைக்கான வைகோவின் குரலைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அவர் பேசும் மாநாடுகளைக் காண கூடும். அந்த மக்கள் கூட்டத்தை கட்சி கட்டமைப்பாக மாற்ற வைகோ தவறிவிட்டார். தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை ஈழவிடுதலை, விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு என்றே இருந்ததால், தமிழ்நாடு பிரச்னைகளில் வைகோ முன்வைத்த சில அரசியல் நிலைப்பாடுகள் கூட அவருக்கு தேர்தலில் வாக்காக மாறவில்லை.

திமுக – அதிமுக உடன் கூட்டணி:
எந்த திமுகவில் இருந்து பிரிந்து வந்து மதிமுக என்ற கட்சியை வைகோ தொடங்கினாரோ அதே திமுக உடன் இன்று கூட்டணியில் இருப்பது முரண்பாடு. இதற்கு முன்பு கூட இதே நிலையை காலம் அவருக்கு உருவாக்கியது. திமுகவை உடைத்து, அதிலிருந்து வெளியேறிய வைகோ 1999ல் மீண்டும் திமுக கூட்டணியில் இருந்ததே அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. 1998 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில், ஜனதா ஆட்சி கவிழ்ந்ததால் 1998ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருந்தது. 3 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றிருந்தாலும் கூட பாஜகவுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்ப பெற்றார். இதனால், எந்த கட்சியை உடைத்து அரசியல் கட்சி தொடங்கினாரோ, எந்த கட்சிக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ அதே திமுகவின் கூட்டணியில் இடம்பெறும் நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார்.

பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோளை ஏற்று வைகோ அக்கூட்டணியில் தொடர்ந்தாலும் கூட திமுக உடன் அவர் இருந்தது வைகோவின் கொள்கை உறுதியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனையால் மதிமுக தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. தொடர்ந்து, தன்னை பொடா சட்டத்தில் கைது செய்த ஜெயலலிதா உடன் இரண்டு முறை வைகோ கூட்டணி வைத்தது அவரின் அரசியல் கொள்கை உறுதி தன்மையை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியது. அரசியல் களத்தில், திமுக, அதிமுகவிற்கு மாற்றாக பார்க்கப்பட்ட மதிமுக, கருணாநிதி, ஜெயலலிதா உடன் மாறி மாறி கூட்டணி வைத்தது அந்த கட்சியின் செல்வாக்கை சரித்தது.

மதிமுக பேசும் கொள்கையை விட புற சூழல் தான் வைகோ கூட்டணி அமைக்க காரணம் என்பதை வெளிப்படுத்தியது. இது அவரின் அரசியல் பின்னடைவாக மாறியது. 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் அளவிற்கு வைகோவிற்கு சரிவை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, மதிமுகவில் இருந்து திமுகவிற்கு கட்சி தொண்டர்கள் சென்ற நிலையில், தனது தாய் கட்சியில் வைகோ கூட்டணி இணைந்து கொண்டதும் சற்று சரிவை தான் ஏற்படுத்தி உள்ளது.வாரிசு அரசியல் கொள்கை உறுதி:
மதிமுக கட்சியை வைகோ தொடங்க வாரிசு அரசியல் எதிர்ப்பும் ஒரு முதன்மையான காரணமாக பேசப்பட்டது. ஆனால், இன்றைக்கு தனது மகனையே கட்சியின் பொதுச்செயலாளராக வைகோ ஆக்கியுள்ளார். அதனால், கட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள். விலகுகிறார்கள். கேள்வி கேட்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் வாரிசு அரசியல் விமர்சனம் இருந்தது. ஆனாலும், மிசாவில் கைதாகி சிறையில் சென்றது. மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடியது, 40 ஆண்டு கால அரசியல் பயணம், பல வருட உழைப்புக்கு பிறகுதா தான் திமுகவில் ஸ்டாலினுக்கு உயர் பொறுப்புகள் கிடைத்தன. ஆனால், கீழ்மட்டத்தில் எந்த பொறுப்பும் இல்லாமல், மக்கள் போராட்டங்களில் களமாடாமல் நேரடியாக கட்சியில் உயர் பொறுப்புக்கு தனது மகனை வைகோ கொண்டு வந்தது சற்று பின்னடைவான விஷயம் தான்.வாக்குகளாக மாறாத வியூகம்:
ஈழம் உள்ளிட்ட சில புள்ளிகளில் தாண்டி பொதுத்தளத்திலும் வைகோ செயல்பட்டிருக்கிறார். ஆனால், அவை அவருக்கு வாக்காக மாறினவா என்றால் சற்று ஆராய வேண்டிய விஷயமாக உள்ளது. காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை மீட்பதற்காக வைகோ மேற்கொண்ட நடைபயணம் ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றுத் தந்தது ஆனால் மக்களின் வாக்குகளைப் பெற்று தரவில்லை. கருவேல மரங்களை வெட்ட நீதிமன்ற தீர்ப்பு, சூழலியல் போராட்டங்களை முன்வைத்து சில விவகாரங்களில் வைகோ தனி கவனம் செலுத்தி இருக்கிறார். ஆனால், அது எல்லாம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மதிமுகவிற்கு புதிய அரசியல் வியூகம் தேவை:
ஈழம் என்றால் வைகோ – வைகோ என்றால் ஈழம். இது தான் வைகோவின் அரசியல் முகவரியாக இருந்தது. ஆனால், ஈழ அரசியல் தமிழ்நாடு தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை வைகோ மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 30 ஆண்டு கால அரசியல் நடவடிக்கையில் ஈழ அடையாளமாகவே மாறிப்போன வைகோ அதிலிருந்து மீண்டு பொதுமக்களின் பிரச்னைக்காக குரல் கொடுத்தால் மட்டுமே புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்க முடியும். தனது மகனை அரசியல் களத்திற்கு கொண்டு வந்த வைகோ, அந்த புள்ளியை எப்படி சாத்தியமாக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இன்றளவில், மதிமுகவிற்கு சட்டமன்றத்தில் 4 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால், கட்சி கட்டமைப்பு என்பது பலவீனமாகியுள்ளது. ஏற்கனவே, பலர் மதிமுகவிலிருந்து வெளியேறியும், பலர் வெளியேற்றப்படும் சூழலிலும் மதிமுகவை வைகோ மகன் எப்படி கட்டமைப்பார் என்பதும் தனி கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

மொத்தத்தில் மதிமுக என்ற கட்சி பயணத்தை இனி புதிய அரசியல் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனை செய்ய தவறினால், ஒரு காலத்தில் செல்வாக்கு செலுத்தி தற்போது சரிவை நோக்கி செல்லும் சில கட்சிகளின் நிலை தான் மதிமுகவிற்கு ஏற்படும் என்பது தான் எதார்த்தம்.

Advertisement:
SHARE

Related posts

நடிகரும், பாஜக எம்.பி.,யுமான சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு!

Jayapriya

ஆட்டத்தைத் தொடங்கிய கந்தசாமி ஐபிஎஸ்

Ezhilarasan

ஆறு தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியீடு!

Halley Karthik