மாநிலங்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம், சென்னை-கோவை இடயே வந்தே பாரத் ரயில் மற்றும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பல்லாவரம் புறப்பட்டார். அங்கு அல்ஸ்தோம் கிரிக்கெட் மைதானத்தில்
பிரதமர் நரேந்தி மோடி பங்கேற்று சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையை கட்டிடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” புதிய முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதற்கு பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு இனங்களைச் சார்ந்த, பல மொழிகளை பேசும் மக்கள் பரந்து வாழும் பன்முகத்தன்மை உடைய மாநிலங்களைக் கொண்ட இந்திய ஒன்றிய அரசானது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு திட்டங்களை தொய்வில்லாமல் நிறைவேற்றும்போது தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளம்பெறுகிறது.
உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற திராவிட மாடல் அரசும் முனைப்போடு உள்ளது. 2,423 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர். பொருளாதாரத்தின் இரத்த நாளமாக விளங்கும் சாலைகளின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து ஒத்துழைப்பை தமிழ்நாடு வழங்கும். அடுத்தக்கட்ட தேவைக்கு சாலைகளின் தேவைகள் உயர்ந்து வருகிறது.
நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சென்னை – மதுரை வந்தே பாரத் சேவையை வழங்க வேண்டும், பயண கட்டணத்தை அனைவரும் பயணம் செய்யும் வகையில் குறைக்க வேண்டும். பல ஆண்டுகளாக இரயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் இல்லையென்பது தமிழ்நாடு மக்களின் கருத்து.
புதிய இரயில்வே திட்டங்களை அறிவிப்பதுடன், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அடுத்தக்கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தொடங்கியுள்ளோம்.
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு பங்கு அளிப்பது நிலுவையில் உள்ளது, காலதாமதமின்றி நிறைவேற்றித் தர வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். மாநிலங்களின் நிதித் தேவைகளையும், மாநிலங்களின் எண்ணங்களின் நிறைவேற்றவும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக மிகத் தேவை.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







