நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோயிலுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொதுசாலையை ஆக்கிரமித்தது கோயில் நிர்வாகமாக இருந்தாலும், அதை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், கோயில்களின் பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் எனக் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பலபட்டரை மாரியம்மன் கோயில் சார்பில் பொது பாதையில் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








