நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022- 23ம் நிதியாண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, உலகிலேயே நமது நாட்டின் பொருளாதாரம்தான் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பட்டியல் சமூக மக்கள், பழங்குடியின மக்களுக்கு ஆதாயம் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியள்ளதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஒமிக்ரான் பாதிப்பின் மத்தியில் நாடு இருப்பதை சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர், துரிதமான தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாம் இதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மற்றும் முதலீடு உள்ளிட்ட 4 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








