ஆவின் ஊழல் நடவடிக்கை; தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர் சங்கம் நன்றி

ஆவின் ஊழல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,…

ஆவின் ஊழல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், லஞ்சம், ஊழல், முறைகேடுகளின் புகலிடமாக ஆவின் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை எந்த ஒரு சமரசங்களுக்கும் இடம் கொடாமல் தகுந்த ஆதாரங்களுடன் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்திருக்கிறது.

ஆனால் அதிகார, பண பலத்தால் அதனை முறியடித்து தொடர்ந்து தங்களின் பதவியை தக்க வைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் செய்த ஆவின் அதிகாரிகளை ஓய்வு பெறும் கடைசி தருணத்தில் (கடந்த சில தினங்களுக்கு முன்) தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்திருப்பது கால தாமதமான நடவடிக்கை தான் என்றாலும் அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சரியான நடவடிக்கையாகவே பார்க்கிறது.

ஏனெனில் இதுவரை தங்களின் குடும்பம் வாழ ஊதியத்துடன் பல்வேறு சலுகைகளை வழங்கி குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்ட ஆவினை உண்மையான அக்கறையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லாமல் வீழ்ச்சியை நோக்கி கொண்டு சென்று, தங்க முட்டை போடும் வாத்தினுடைய வயிற்றையே அறுத்தெடுத்து அதனை குற்றுயிரும், குலையுயிருமாய் ஆக்கி லட்சங்களிலும், கோடிகளிலும் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தண்டிக்கப்படத் தானே வேண்டும்.

அந்த வகையில் தமிழக அரசு காலதாமதமாக முடிவெடுத்தாலும் கூட சரியான முடிவெடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் அதிகாரிகளை ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்து வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் ஆவினில் இன்னும் களையெடுக்கப்பட வேண்டிய ஊழல் பெருச்சாளி அதிகாரிகள் இணையத்திலும், ஒன்றியத்திலும் நிறையவே நிரம்பிக் கிடக்கின்றனர். எனவே அவர்களையும் பணிநீக்கம் செய்து ஊழல் அதிகாரிகளை களையெடுத்து அந்த இடங்களில் நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.