கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. அதனால் ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள தேர்தல் களத்தில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அதேபோல் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க, காங்கிரஸ் கட்சியும் பல்வேறு புது வியூகங்களை வகுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தனது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமைய்யா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
- வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிவாரணம்.
- டிப்ளமோ படித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1,500 நிவாரணம்
- காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை
- அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்
- அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000
- கர்நாடக அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்
- வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.
- ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும்.
- கால்நடைகள் வாங்க பெண்களுக்கு கடனுதவி.
- சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும்.
- ஆழ்கடல் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்.
- மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ6.,000 நிதி உதவி.
- பால் மானியம் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ7 ஆக உயர்வு.
- சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே “வெறுப்பை பரப்பும்” மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக “உறுதியான” நடவடிக்கை.
- SC/ST/OBC/சிறுபான்மையினர்/ லிங்காயத் மற்றும் வோக்லிகாக்கள் போன்ற பிற சமூகங்களின் “நம்பிக்கை மற்றும் விருப்பங்களுக்கு ” இடமளிக்கும் வகையில், இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 50-ல் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும்
- காஷ்மீரை விட்டு வெளியேறி கர்நாடகா வரும் பண்டிட்டுகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும், காஷ்மீரி கலாச்சார மையம் தொடங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா
தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் வாக்குறுதி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு உதவிய இந்த வாக்குறுதியை தற்போது காங்கிரஸ் கர்நாடகாவில் கையில் எடுத்து உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா