100 பழங்குடியின சிறுவர்- சிறுமிகளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிறகுகள் 100’ என்ற திட்டத்தின் கீழ் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவுக்கு ஒரு நாள் பயணமாக 100 பழங்குடியின சிறுவர், சிறுமிகளை திங்கள்கிழமை அழைத்துச் சென்றோம்.
திருவள்ளூரில் உள்ள பழங்குடியினக் குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறகுகள் 100’ (Wings 100) என்ற திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இத்திட்டத்தின் கீழ், 100 பழங்குடியின சிறுவர், சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு, காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 6 மாதங்கள் ஆகிறது. அடுத்த ஆண்டு இந்த முகாமிற்கு 200 சிறார்கள் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தில் சிறுவர்கள், தாங்கள் பெற்ற அறிவை தங்கள் சமூகத்திற்கும் கற்றுக் கொடுக்க உதவியாக அமையும், என்றார். மேலும் இருளர் சமூகத்தினரிடையே நடக்கும் குழந்தை திருமணங்களை குறைப்பதும் இதன் நோக்கமாகும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.








