நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட யங் இந்தியன் நிறுவனம் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை நடத்தி வந்தது. இதில் நிதிசார் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சோனியாவுக்கும், ராகுலுக்கும் அமலாக்கத் துறை விசாரணை அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் 1942 இல் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசு அந்தச் செய்தித்தாளை ஒடுக்க நினைத்தது. இன்றைய காலகட்டத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசும் அமலாக்கத் துறையை பயன்படுத்தி அதையே செய்கிறது” என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் இந்த விவகாரத்தில் போராடி வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2012இல், சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்டை கைப்பற்றியதில் நிதி மோசடி நடைபெற்றதாகப் புகார் அளித்தார்.
அதன்பேரில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொடங்கினார். 2008ம் ஆண்டு வரை காங்கிரஸுக்கு நெருக்கமானதாக நேஷனல் ஹெரால்டு நிறுவனம் இருந்து வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக நேஷனல் ஹெரால்டு அறிவித்தது.
இந்தச் செய்தித்தாள் மூடப்படுவதற்கு முன் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்தது. 2009இல் இந்தச் செய்தித்தாள் நிறுவனத்தை மூடுமாறு சோனியா உத்தரவிட்டார். விசாரணையின் ஒரு பகுதியாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை சமீபத்தில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.








