“மேகதாது; உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்”

தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாது குறித்து விவாதிப்போம் என்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாது குறித்து விவாதிப்போம் என்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருக்கிறார். ஆணையத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதையும் மீறி மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்போவதாக ஆணையத் தலைவர் கூறுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகக் கடந்த 7-ஆம் தேதி செய்திகள் வெளியான போது, ஆணையத்தின் செயலுக்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது பா.ம.க தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது; நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்ற நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக எவ்வாறு செயல்பட முடியும்? மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வினா எழுப்பியுள்ளதாகவும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசும் அதே காரணங்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததுடன், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குக் கடிதமும் எழுதியது. ஆனால், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தப் போவதில்லை என்றும், திட்டமிட்டபடி வரும் 17-ஆம் தேதி கூட்டத்தில் மேகதாது குறித்துக் கண்டிப்பாக விவாதிக்கப்படும் என்றும் ஆணையத் தலைவர் ஹல்தர் கூறியிருப்பது ஒருதலைபட்சமானது என்பது மட்டுமின்றி, மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்கக் காவிரி ஆணையம் துடிப்பதையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. ஆணையத்தின் அதிகார வரம்புகளைக் குறிப்பிட்டு மத்திய அரசு வெளியிட்ட அரசாணை தான் ஆணையத்தின் அரசியலமைப்பு சட்டமாகும். அதன்படி தான் ஆணையம் செயல்பட வேண்டும். மாறாக, மேகதாது அணை குறித்து விவாதித்து முடிவெடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு வழக்கறிஞர் சட்டக் கருத்து வழங்கியதால் மட்டுமே, அந்த அதிகாரம் வந்து விடாது. மத்திய அரசு வழக்கறிஞரின் சட்டக் கருத்து உச்சநீதிமன்றத்தில் செல்லாது எனத் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? – திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ’

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிப்பது இன்றைய நிலையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் இல்லை. ஆணையத்தின் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிவித்துள்ள அவர், அதன்பின்னர் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், இந்த விஷயத்தில் ஆணையம் அவசரம் காட்டுவது ஏன்? கேள்வி எழுப்பியுள்ள அவர்,

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக இப்போது இருக்கும் ஹல்தர், மத்திய நீர்வள ஆணையத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான உறுப்பினராக இருந்த போது தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தவரே அதை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கத் துடிப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்காவிட்டால், மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதனால், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு இன்னும் விரைவாகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கத் தடை கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறைக் கால அமர்வு நாளை கூடுகிறது. அந்த அமர்வின் முன் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் நேர் நின்று வழக்கை உடனடியாக விசாரிக்கும்படி முறையிட்டு தடை பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது விஷயத்தில் ஒரு சார்பாகச் செயல்படும் ஆணையத் தலைவரை நீக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.