அரிய வகை மரபணு நோயால் உயிருக்குப் போராடும் மகனை காப்பாற்றுவதற்காக, தனது வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மருத்து தயாரித்து வருகிறார் தந்தை ஒருவர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள யுன்னானின் மாகாணத்தில் உள்ளது குன்மிங் நகரம். இந்தப் பகுதியை சேர்ந்தவர் சூ வெய் ( Xu Wei). இவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகள், ஒரு மகன். மகன் ஹாயோயங் (Haoyang)கிற்கு Menkes syndrome என்ற அரிய வகை மரபணு நோய். உடலில் உள்ள தாமிர அளவை பாதிக்கும் இந்த நோய் பாதித்த குழந்தைகள் 3 வயதுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். ஹாயோயங்-கால் பேசவோ, அசையவோ முடியாது. ஆனால், உடலை தொட்டால் குழந்தை உணர்ந்து பார்க்கும்.
உயர்நிலை வகுப்பை மட்டுமே முடித்திருக்கும் சூ வெய், தனது மகனுக்கு இந்த நோய் தாக்கும் முன் ஆன்லைன் வணிகம் செய்து வந்தார். இப்போது வீட்டில் மருத்துவ ஆய்வகம் நடத்தி வருகிறார்.
இந்த நோயை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டாலும் நோயின் தன்மையை குறைக்கும் மருந்துகள் சீனாவில் கிடைக்கவில்லை. இதனால் தானே மருந்தை தயாரிக்க முடிவு செய்தார். அது தொடர்பாக ஆன்லைனில் தேடினார் சூ வெய். தெரிந்துகொண்டார்.
மனைவி, மற்றொரு குழந்தையுடன் நகரின் மற்றொரு பகுதியில் வசிக்க, தனது வீட்டை ஆய்வுக் கூடமாக மாற்றினார் சூ வெய். அங்கு மகனுக்கான மருந்தை தானே தயாரிக்க ஆரம்பித்தார். சில வாரங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அது ஒர்க் அவுட் ஆனது. இப்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட மருந்தை தினமும் தானே குழந்தைக்கு கொடுக்கிறார். அது குழந்தையின் உடலில் மாயமான தாமிரத்தைக் கொடுக்கிறது. சிகிச்சை தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு நல்ல பலன் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார், அந்த அமெச்சூர் ஆய்வாளர்!
‘முதலில் என் மகன் மருந்து தயாரிக்க இருப்பதாகச் சொன்னதும் நகைச்சுவை என்று நினைத்தேன். இது வேண்டாத வேலை என்று கூட பயந்தேன். ஆனால், ஆறு வாரங்களில் முதல் டோஸ் மருந்தை அவர் தயாரித்துவிட்டார்’ என்று வியப்பாகச் சொல்கிறார் சூ வெய்-யின் தந்தை சூ ஹியான்ஹாங்!
தேவைகள்தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றன என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!









