விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில், பிறந்து 5 நாளே ஆன குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் குறித்து, 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்க மருத்துவ கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவருக்கு கடந்த வியாழக்கிழமை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென கட்டில் உடைந்ததில் கீழே விழுந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சங்குமணி, குழந்தைக்கு காயம் ஏற்பட்ட விவகாரம் குறித்து, 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இந்த குழு விசாரணை அறிக்கையை இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும் எனவும் தெரிவித்தார். விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு, சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணி தெரிவித்தார்.







