மாநில அரசின் உரிமையை முதலமைச்சர் எப்போதும் விட்டுத்தர மாட்டார்; சேகர்பாபு

மேகதாது அணை பிரச்னையில் மாநில அரசின் உரிமைகளை முதலமைச்சர் எப்போதும் விட்டு தர மாட்டார் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் பால்குட திருவிழாவை அறநிலையத்துறை…

மேகதாது அணை பிரச்னையில் மாநில அரசின் உரிமைகளை முதலமைச்சர் எப்போதும் விட்டு தர மாட்டார் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் பால்குட திருவிழாவை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம், பொன்னம்பலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, சிதம்பரம் நடராஜர் கோயிலில், இறை அன்பர்கள் அனைவரும் பிரச்னை இன்றி வழிபட தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 112 திட்டங்கள் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதில் 80 சதவீதம் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் அடிக்கல் நாட்டு விழா தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் காளிகாம்பாள் திருக்கோவில் வெள்ளி தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது என்று பேசினார். தொடர்ந்து, இன்னும் 2 வாரத்திற்குள்ளாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10க்கும் மேற்பட்ட பணிகளை துவக்கி வைக்க இருக்கிறார் என்றும் தெரிவித்தார். மேலும் மேகதாது அணை பிரச்னையில் மாநில அரசின் உரிமைகளை முதலமைச்சர் எப்போதும் விட்டு தர மாட்டார். சட்டப்போராட்டம் நடத்தி தேவையானதை பெறுவோம் என்றும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.