10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்ய புதிய இடங்களில் அலுவலகங்கள் தொடங்கப்படும் என்று சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
உணவு நிறுவனங்கள் டெலிவரி செய்வதில் தற்போதுவரை 30 நிமிட ஆர்டர் மற்றும் 45 நிமிடத்திற்குள்ளான ஆர்டர்களை டெலிவரி செய்வது போன்றவையே நடைமுறையில் இருந்துவருகிறது. இந்த நிலையில் 10 நிமிடத்திற்குள் உணவு டெலிவரி செய்வதில் இருக்கும் நடைமுறைகள் குறித்து சொமேட்டோ நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/deepigoyal/status/1505900098831917060
ஊழியர்களை பாதுக்காப்பற்ற சூழலுக்கு உணவு டெலிவரி நிறுவனங்கள் தள்ளுவதாக சமீப காலமாகவே குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. குறிப்பிட்ட உணவு டெலிவரிகளுக்கு மட்டும் இல்லாமல் காய்கறிகளை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் என பொதுவாக டெலிவரி நிறுவனங்கள் இரவு நேரத்திலும், ஊழியர்களை கடினமான சூழலுக்கு உட்படுத்துவதாக பேச்சுகள் எழுந்தவண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ள சொமேட்டோ நிறுவனர், 10 நிமிடத்திற்குள் உணவு டெலிவரி செய்வதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து பேசியுள்ளார்.
மேலும், தரமான உணவுகளை 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்ய குறிப்பிட்ட இடங்களில் மட்டும் புதிய அலுவலகங்கள் திறக்கப்படும். இதன்மூலம் தரமான உணவுகளை அருகாமையில் இருந்து 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யலாம். 10 மற்றும் 30 நிமிட டெலிவரிகளில் காலம் தாழ்த்துவதால் எந்த அபராதம் கட்டத் தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக டெலிவரி செய்பவர்களுக்கும் ஊக்கத்தொகை இல்லை என்று தெரிவித்துள்ள அவர், 10 நிமிடத்திற்குள் எந்த உணவை டெலிவரி செய்ய முடியும் என்ற ஒருவரின் கேள்விக்கு அவர், பிரட், ஆம்லெட், காபி, டீ, பிரியாணி போன்ற உணவுகளை விரைந்து டெலிவரி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 10 நிமிட ஆர்டர்கள் ஊழியர்களை அவசரப்படுத்துவதாகவும், பதற்றமடைய செய்வதாகவும் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துவருகிறது.
மேலும் அவரது பதிவில், 10 நிமிடத்திற்குள்ளான டெலிவரி விரைவில் சொமேட்டோவில் நடைமுறைக்கு வரும். இதில் உணவின் தரம் 10க்கு பத்தாகவும், ஊழியர்களின் பாதுக்காப்பு 10க்கு பத்தாகவும், டெலிவரி செய்யும் நேரம் 10 நிமிடமாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.









