விபத்தினால் நடக்க முடியாமல் தவித்த மாணவிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சக்தி. அவரது மகளான சிந்து 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ஏற்பட்ட விபத்தில், கால் எலும்புகள் முறிந்ததால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நடக்க இயலாத சூழலிலும் தன்னம்பிக்கையுடன், 12ம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவி சிந்து குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார்.
இதனையடுத்து மாணவி சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சிந்துவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கினார். முதலமைச்சருடன் புகைப்படம் எடுக்க மாணவி விரும்பியதையடுத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.








