நந்தியே சற்று விலகி இரும் என கூறிய நடராஜர் நந்தனாரே உள்ளே வா என கூறி
இருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது. அன்று கடவுள் செய்யாததை
இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ளார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வழுதரெட்டியிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி பாசறை கூட்டம் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஏற்றத்தாழ்வு உள்ள சமுதாயத்தை எதிர்க்க வேண்டும் என முதலில் கூறியவர் புத்தர். அதனால் தான் அம்பேத்கர் புத்த மதத்திற்கு செல்ல வேண்டும் என கூறியதாகவும், பெளத்த மதம் பிறந்த இடம் இந்தியாவாக இருந்தாலும் புகுந்த இடத்திற்கு சென்றதால் இம்மதம் வளர்ச்சி பெற்றதாக கூறினார்.
எப்பொழுதுமே பிறந்த இடத்தினை விட புகுந்த இடத்தில் நிரந்தர வளர்ச்சி இருக்குமென்றும் திராவிடத்தை அழிக்க வேண்டுமென இன்றளவும் ஆரியம் முயற்சி செய்வதாகவும், கடவுளை தரிசிப்பதில் தவறில்லை. எல்லோரும் சமம் என்று கூறுவது தான் திராவிடம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், அனைத்து சாதியினரும் ஏன் அர்ச்சகராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சாமியை தரிசனம் செய்ய சென்ற போது தாழ்த்தப்பட்டவர் என்பதால் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்காமல் வெளியில் இருந்து சாமியை தரிசனம் செய்ய கூறிய போது நந்தி தடங்கலாக இருந்ததால் நந்தியே சற்று விலகி இரும் என நடராஜர் தெரிவித்ததால் நந்தி சற்று சிதம்பரம் கோவிலில் விலகி இருக்கும் என புராணம் கூறுகின்றன.
நந்தியே சற்று விலகி இரும் என கூறிய நடராஜர் நந்தனாரே உள்ளே வா என கூறி இருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது என்றும் அன்று கடவுள் செய்யாததை இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என கலைஞர் செய்திருப்பதாகவும், அதை தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என நடைமுறை படுத்தியுள்ளதாகவும், எல்லோரும் சமம் எல்லோரும் ஒன்று என்ற உணர்வினை உருவாக்கியது தான் திராவிடம் என அமைச்சர் பொன்முடி
கூறினார்.