பெரியாரையும், சாதியையும் இரு கையில் வைத்துக் கொண்டு திமுக அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில், நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் பணி காரணமாக வானதி சீனிவாசன் டெல்லியில் உள்ளார். அதனால் அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடைபெற்ற இவ்வாகன துவக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதையடுத்து, அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோவையில் பாஜக சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாகனத்தின் மூலம் மக்கள் மத்திய அரசின் திட்டம் சார்ந்த பயன்களைப் பெறலாம். மக்கள் குறைகளையும் வாகனத்தில் தெரிவிக்கலாம். தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் இந்த முயற்சி
பாராட்டுதலுக்குறியது.
பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக இரண்டாவது அறிக்கையை ஆளுநரிடம் கொடுக்க உள்ளோம். 21 ஆம் தேதி பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் அறிக்கை கொடுக்கப்படும். இதன் மூலம் இந்த ஊழலில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் என்ன என்பதைத் தெரிவிக்க உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தேச பாதுகாப்போடு விளையாடக் கூடாது. தொடர்புடைய அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக சில அதிகாரிகள் மீது டிஜிபி கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளார். யாரையோ காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கைகயை தாமதம் செய்து வருகின்றார் என்று குற்றம் சாட்டினார்.
பொங்கல் தொகுப்பு ஊழலும் சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது. செஸ் ஒலிம்பியா போட்டி தமிழகத்தில் நடைபெறுவது பெருமைக்குரியது. பிரதமர் அந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது. 187 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வை முதல்வர் நல்ல முறையில் நடத்த வேண்டும். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக பாஜக தெளிவாக உள்ளது. மற்ற கட்சிகளுக்குள் பாஜக விருப்பு வெறுப்புகளை காட்டாது. தனிப்பட்ட முறையில் அதிமுகவில் அனைத்துத் தலைவர்களுடனும் நட்பு தொடர்கிறது.
ஜிஎஸ்டியில் போடப்பட்ட அனைத்து வரிகளும் ஜிஎஸ்டி கவுன்சில் மூலமாக
ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஆளுநர் உரை தொடர்ந்து அரசியலாக்கப்படும் நிலையில், ஆளுநரை வம்புக்கு இழுத்து திமுக அரசியல் செய்கிறது. திமுக வின் ஓராண்டுகால மக்கள் வெறுப்பை மறைக்க ஆளுநரை பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரியாரையும், சாதியையும் இரு கையில் வைத்துக்கொண்டு திமுக
அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
-ம.பவித்ரா