தருமபுரி மாவட்டத்தி்ல் ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியை துவக்கிவைக்கச் சென்றபோது பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுப் பணித் துறை அதிகாரியிடம் இது திராவிட ஆட்சியா அல்லது ஒரு மதத்திற்கான ஆட்சியா என கேள்வி எழுப்பி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கண்டித்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரியில் 1.38 லட்சம்
மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்
செந்தில்குமார் தொடங்கிவைக்க வருகைபுரிந்தார். அப்போது பொதுப் பணித் துறை
சார்பில் பூமி பூஜை செய்ய ஐயர் ஒருவர் வரவழைக்கப்பட்டு தேங்காய், வாழைப்பழம்,
கற்பூரம் உள்ளிட்ட தீபாராதனை பொருட்களை வைத்திருந்தனர்.
இதைக்கண்ட செந்தில்குமார் பொதுப் பணித் துறை அதிகாரியை அழைத்து இது
திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற
சம்பிரதாயங்கள் செய்யக் கூடாது என உங்களுக்குத் தெரியாதா. விதிமுறைகள்
வழங்கவில்லையா என கேட்டார். அப்போது, பொதுப் பணித்துறை அதிகாரி நாடாளுமன்ற
உறுப்பினரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் இது அனைவருக்குமான ஆட்சி, திராவிட
மாடல் ஆட்சி, ஒரு மதத்தினரை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்துவது தவறு,
அனைத்து மதத்தினரையும் அழைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
பின்பு அனைத்து சம்பிரதாயப் பொருட்களையும் அகற்றிவிட்டு பின்பு சீரமைக்கு பணிகளை
செல்தில்குமார் துவக்கி வைத்தார்.
-ம.பவித்ரா








