அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவ ஆட் சேர்ப்பிற்கான வயது வரம்பை 21-ல் முதல் 23- வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.
இதில், 17.5 முதல் 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி என முதலில் அறிவிக்கப்பட்டது. 10 அல்லது 12-ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும் என்றும் 4-வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த திட்டத்திற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் 4 வருடங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வடமாநிலங்களில் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து, 2022 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்பு சுழற்சிக்கு ஒரு முறை விலக்கு அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், 2022ஆண்டிற்கான அக்னிபாத் திட்டத்திற்கான உச்ச வயது வரம்பு 21 முதல் 23 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு வருட பதவி காலம் முடிந்தவுடன் அவர்களை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் விட்டு விடமாட்டோம் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் போராட்டம் விரிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 ஆண்டு பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது எனக்கூறி எதிர்க்கட்சிகளும், பதவி கால குறைப்புக்கு எதிராக ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








