“தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைத்து ஆதரவையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது!” – பிரதமார் மோடி

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைத்து ஆதரவையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமார் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்து போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோவில் பயணித்தனர். இதனையடுத்து சென்னை ஐஐடி யில் புதிதாக கட்டப்பட்ட சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடி-யில் உள்ள K.V. மைதானத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை இணைந்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் அனைவருடனும் சென்னையில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இன்றைய நிகழ்ச்சியில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நிறைவடைந்த பல திட்டங்களை நாங்கள் தொடங்கி வைக்கிறோம்; அதேவேளையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறோம். இவற்றில் சில திட்டங்கள் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும்; மற்றவை தொழில் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தும். இவை அனைத்தும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த நன்னாளில் மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோயில்கள் முதல் மெட்ரோ ரயில் வரை, தமிழ்நாட்டின் இந்த அனுபவம் இன்றைய இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்தியா தனது கலாச்சார வலிமையிலிருந்து உத்வேகம் பெறுகிறது, அறிவியல் முன்னேற்றம் மூலம் வளர்ச்சியை அடைகிறது மற்றும் நவீன உள்கட்டமைப்பு மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

சில நாட்களுக்கு முன்புதான், உங்கள் ஆசியுடனும், நாட்டு மக்களின் அன்புடனும், அரசாங்கத் தலைவராக 25 ஆண்டுகள் என்ற முக்கிய மைல்கல்லை நான் எட்டினேன். நான் 2001-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சராகப் பதவியேற்றேன். அப்போதிருந்து, முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் பணியாற்றும் வாய்ப்பை நாட்டு மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.

நானும் ஒரு முதலமைச்சராக இருந்ததால், மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை என்னால் தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், பிரதமரான பிறகு, அந்த விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலமும் தனது லட்சிய இலக்குகளை அடைவதை உறுதி செய்யவும் பாடுபட்டேன். முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

போக்குவரத்தை மேம்படுத்துவதற்குச் சாலைகளை அகலப்படுத்துவது மட்டும் போதாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நவீன நகரங்களுக்கு முழுமையான உள்கட்டமைப்பு தேவை. அதனால்தான், கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் கட்டமைப்பை நாங்கள் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளோம். 2014-இல் ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் செயல்பாட்டில் இருந்தன; இன்று இந்தியா முழுவதும் 25 நகரங்களில் அவை இயங்குகின்றன.

மாநிலங்களைச் சக்தி படைத்தவையாக மாற்றுவதன் மூலமே தேசத்தைச் சக்தி படைத்தவையாக மாற்ற முடியும். உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பம் முதல் முழுமையான தயாரிப்புகள் வரை, மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியையும் வலுப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் இந்தியாவை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாற்றியுள்ளன. 2014-ஆம் ஆண்டு முதல், நமது மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 11 மடங்கும், பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 50 மடங்கும் அதிகரித்துள்ளது. எங்கள் பொறியியல் துறை ஏற்றுமதியும் புதிய சாதனை படைத்துள்ளது.

வலுவான உற்பத்தித் துறையை உருவாக்க, மூலப்பொருட்களைக் கொண்டு செல்லச் சிறந்த சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் நமக்குத் தேவை. இத்தகைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும் ஒரு தமிழகத்தை உருவாக்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதில் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. வளர்ச்சியடைந்த தமிழகத்தின் மூலம் ‘விக்சித் பாரத்’ (Viksit Bharat) எனும் தொலைநோக்குப் பார்வையை நாம் இணைந்து நனவாக்குவோம்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.