அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ல் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன்…

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ல் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு,  ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்திருந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமி மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.  அதேபோல இந்த வழக்கை ஜுலை 2024 ம் ஆண்டுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் ஐ பெரியசாமி மார்ச் 28ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.