காலை சிற்றுண்டி திட்டம் தேசிய கல்வி கொள்கையில் உள்ளதாக, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதனை திமுக அரசு “பிட்” அடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நீட் தேர்வு அவசியமான ஒன்று. தமிழகத்தில் மட்டும்தான் அநாவசியமாக பேசபடுகின்றது.
நீட்டிற்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு எதிரானது. நாடாளுமன்ற உறுப்பினர்
கார்த்திக் சிதம்பரம் நீட்டிற்கு ஆதரவாக இருக்கின்றார். அதற்காக அவர்களிடம் ஒத்த கருத்து இல்லை என சொல்ல வில்லை. 13 ஆண்டு விவசாயம் பார்த்து படித்த ஒருவர் நீட்டில் தேர்வாகி இருக்கின்றார். வெற்றி கதைகளை மாணவர்களுக்கு சொல்லுங்கள் வெட்டி கதைகளை சொல்லாதீர்கள்.
உயிரை போக்குவதை கொண்டாடுகின்றனர். திண்டாட்டத்தோடு இருக்கும் குடும்பத்தினரை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்தியாவிற்கு என கல்வி கொள்கை இருக்கும் போது தமிழகத்திற்கு என கல்வி கொள்கை ஏன் தனியாக கொண்டு வர வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டம் புதிய கல்வி கொள்கையில் இருக்கின்றது. புதிய கல்விகொள்கையில் இருந்து “பிட்” ஆடிக்குறாங்க. கல்வி மத்திய பட்டியலுக்கு எப்போது மாறியது.கட்சதீவில் இருந்து எல்லாத்தையும் காவு கொடுத்தது யார். இன்று முரசொலியில் யோகி ஆதித்யநாத் குறித்து எழுதி இருக்கின்றனர். ரஜனிகாந்த் யோகி காலில் விழுந்து ஆசி வாங்கிட்டாராமாம். ரவுடிகள் சாம்ராஜ்யமாக இருந்த உ.பியை அமைதியான மாநிலமாக மாற்றியவர் யோகி ஆதித்தயநாத்.
ரஜினி அவர் காலில் விழுந்து விட்டால் அவர் மோடிக்கு போட்டியல்ல. மீண்டும் மோடி பிரதமராவார். நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து எல்லாம் நான் பேச முடியாது. கவர்னர் எல்லாம் ரப்பர் ஸ்டாம் கிடையாது. மசோதாக்களை நிறுத்தி வைத்தால்,அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.
நொய்யல் ஆற்று நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். தமிழகத்திற்கு வருவது எப்போதுமே பிரியமான ஒன்று. நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லை . அதில் கழிவுகள் கலப்பதாக அறிந்தேன். இன்று மாலை நேரில் பார்வையிடுகின்றேன். நீர் நிலைகள் பாதுகாப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இஸ்ரோ நிலையத்தில விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வந்த அசதி இருந்தாலும் விஞ்ஞானிகளை சந்திக்கின்றார். இந்த ஊக்கமும் சந்திராயன் வெற்றி பெற காரணம். அனைத்து மாநில தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த வெற்றிக்கு காரணம். பிரதமரின் ஊக்கம்தான் சந்திராயன் வெற்றிக்கு காரணம். கொரோனாவின் போதும் பிபிஇ கிட் போட்டு கொண்டு ஊக்க படுத்தியதால்தான் கொரொனா ஊசிகளை அனைவருக்கும் போட முடிந்தது.
இவ்வாறு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.







