பட்டுக்கோட்டை ரயில் தண்டவாளத்தின் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோயில் செல்லும் சாலையில் ரயில் தண்டவாளத்தின் அருகே, பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை உடல் கிடந்தது. அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறியதில் குழந்தையின் கை, கால்கள் துண்டு துண்டாகக் கிடந்தன. நாய்கள் கூட்டமாக சுற்றி வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது ஆண் குழந்தை சடலம் கிடந்தது தெரியவந்தது.
தெரு நாய்களை விரட்டிய பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ரயில் பாதையில் சடலம் கிடந்ததால் ரயில்வே காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
பிறந்த குழந்தையை யாராவது இங்கு வந்து உயிருடன் விட்டு சென்றார்களா? அல்லது இறந்த குழந்தையை போட்டு சென்றார்களா? என்பது குறித்தும், குழந்தை எப்படி இறந்தது? உயிருடன் இருந்த குழந்தையை நாய் கடித்ததால் இறந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின்றி தவிக்கும் பலர் இருக்கும் சூழலில், இப்படி பிறந்த குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யாராக இருக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.







