“பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை  கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் விலை உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்தார். அதன்படி, விலை உயர்வு அடிப்படையில் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை  கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ.820 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய பாஜக அரசு.  மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், எரிவாயு  சிலிண்டர் விலையையும் மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்”

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.