முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா?


மரிய ரீகன் சாமிக்கண்ணு

புதிய உலகச் சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உதகையில் நடத்தி முடித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி செயல்படும் வகையில் ஆளுநர் நடவடிக்கை இருப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அரசியல் கட்சிகள் இந்த பிரச்னையை எழுப்பி ஆளுநருக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இந்த நிலையில் தான், தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்க, வழக்கம் போலவே, அதிமுக, பாஜக இந்த மசோதாவை எதிர்த்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. துணை வேந்தரை நியமிக்கும் அதிகரம் யாரிடம் உள்ளது? பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருக்க முடியுமா? அதற்கான கடந்த கால முன்னுதாரணங்கள் உள்ளனவா? வேந்தர் நியமனத்தில் பல்கலைக்கழக நடைமுறை என்ன? பல கோணங்களில் இந்த தலைப்பை விவாதிக்க வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகம் உருவாக்கும் அதிகாரம் யாருக்கு?:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குப்த பேரரசர் முதலாம் குமார குப்தர் காலத்தில் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில், அது நேரடியாக பிரிட்டீஸ் அரசின் கீழ் இருந்தது. அந்த பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க கூடிய முறையை பிரிட்டிஸ் காலத்து சட்டங்கள் தீர்மானித்தன. பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் மத்திய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் ஆகியவை சட்டத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டன. அண்மையில் கூட, சிவநாடார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டத்தின் மூலமாக இயற்றப்பட்டது. மாநில பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் பொழுது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி, பல்கலைக்கழகங்கள் ஏன் ஏற்படுத்தப்படுகின்றன, வேந்தர் யார்? துணை வேந்தர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? மற்ற அதிகாரிகள் எப்படி நியமிக்கப்பட வேண்டும்? அந்த பல்கலைக்கழகத்தின் அதிகாரம் என்ன? என்பதை சட்டமன்றம் இயற்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பல்கலைக்கழக வேந்தராகும் தகுதி யாருக்கு?: 

தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள் 13 இருக்கின்றன. இந்த மாநில பல்கலைக்கழகங்களில், சட்டத்திற்காக என்று, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 1998ல் ஏற்படுத்தப்பட்டது. மேலும், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருநெல்வேலியில் மீனாட்சி சுந்தரனார் பல்கலைக்கழகம், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சியில் பாரதி தாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மாநில பல்கலைக்கழகங்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாநில பல்கலைக்கழகத்தில் வேந்தராக ஆளுநரை பிரிட்டிஸ் ஆட்சியின் வழி வந்தது போலவே தற்போது நியமிக்கிறார்கள்.

இதில், விதிவிலக்காக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 2012ல் திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதற்கான விதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்டாலும் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தேசிய பல்கலைக்கழகங்கள் நாட்டில் பல இடங்களில் உள்ளன. அதே போல நானும் எனது ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்கலைக்கழகம் உருவாக்குவேன் எனக் கூறி திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தை தொடங்கினார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமித்தார். ஆளுநர் அல்லது வேறு யாரை வேண்டுமென்றாலும் வேந்தராக நியமிக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உண்டு என்பது இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதாவது, பல்கலைக்கழக வேந்தர் யார்? அவரின் நியமனம் என்ன என்பதை சட்டமன்றம் தீர்மானிக்கிறது. என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


இணை வேந்தராக சட்ட பல்கலைக்கழகத்திற்கு சட்ட அமைச்சரும், மாநில பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுகிறார். துணை வேந்தர் யார்? அவரை நியமிப்பது யார் என்பது எல்லாம் மாநில அரசு இயற்றும் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மாநிய குழுவும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தகுதிகளை தீர்மானிக்கும்.

வேந்தரின் அதிகாரம் – துணை வேந்தரின் அதிகாரம்:

அரசமைப்பு சட்டம் 372 படி எந்தெந்த சட்டங்கள் குடியரசு ஆன பிறகு அதிகாரம் உள்ளதாக இருந்ததோ அந்த சட்டங்கள் அப்படியே தொடரும். அது குறிப்பிட்ட அளவில் மாநிலங்கள் அல்லது மத்திய அரசு மாற்றும் வரை அப்படியே தொடரும் என அரசமைப்பு சட்டத்தின் 372 சரத்து கூறுகிறது. அதன் அடிப்படையில் தான் சுதந்திரத்திற்கு முன்பு உள்ள சட்டங்கள் இப்போது வரையிலும் சட்டங்களாக நீடிக்கின்றன. உதாரணமாக, இந்திய தண்டனைச் சட்டத்தை 1860ல் பிரிட்டிஸ் நாடாளுமன்றம் உருவாக்கியது. பிரிட்டிஸ் காலத்தில் இருந்து தொடரும் இந்திய தண்டனைச் சட்டம் போலவே பல சட்டங்கள் இன்னும் இந்திய அரசியலமைப்பில் நீடிக்கின்றன. இந்த நடைமுறைப் போலவே, நாளந்த பல்கலைக்கழகம் குப்த பேரரசு காலத்தில் தொடங்கப்பட்டாலும், அதனை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிசார் ஏற்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அதைப் போன்ற நடைமுறையைப் பின்பற்றும் வகையிலும் வேந்தராக ஆளுநர் நியமிக்கப்படுவதை பழக்கமாக்கிவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, துணை வேந்தரை யார் நியமிப்பது? என்ற பிரச்னை, தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்த போது வந்தது. நீதிபதி ஜெகதீசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை துணை வேந்தராக நியமித்தார். இதை பன்வாரிலால் புரோகித் மாற்றி அமைத்து ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரி என்பவரை துணை வேந்தராக நியமித்தார். இது சர்ச்சையானது, அப்போது, 372 சட்டப்பிரிவின் படி பிரிட்டிஸ் காலத்து நிலையில் உள்ள சட்டத்தின் அதிகாரத்தில், ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது என பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். துணை வேந்தர் யார் என்பதை ஆளுநர் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தை விட கூடுதல் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில், தேடுதல் குழு கொடுக்கும் துணை வேந்தர்கள் மூன்று பேரிடம் முதன் முறையாக புரோகித் நேர்காணல் நடத்தினார். அவரே யார் துணை வேந்தர் என்பதை தீர்மானித்தார். இந்த துணை வேந்தர் நியமனத்தில் வேந்தர் தான் முடிவெடுக்கிறார் என்ற நிலையை இங்கு தான் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல் முறையாக தொடங்கி வைக்கிறார்.


கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் துணை வேந்தர்களை அவர்கள் தான் தீர்மானித்தார்கள். அது ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே இருந்த தொடர்பைப் பொறுத்து அமைந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், ஆளுநராக இருந்த புரோகித் உருவாக்கிய நடைமுறையை தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி பின்பற்றுகிறார். இந்த நடைமுறையை மாற்றி அமைக்க கூடிய சட்டத்தை மாநில அரசு இயற்ற முடியும். ஏனென்றால், இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்துமே தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்டத்தின் மூலமாகவே உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பார்த்தால், வேந்தர் யார் என்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாற்றி அமைக்க முடியும். ஏனென்றால், திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், வேந்தராக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும் போது, மாநில சட்டமன்றம் தான் மாநில பல்கலைக்கழகங்களை உருவாக்க சட்டம் இயற்றுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என தமிழ்நாடு சட்டமன்றம் மாற்றி அமைக்கலாம். அவ்வாறு செய்தால் ஆளுநரின் அதிகாரங்கள் மொத்தமாக பறிக்கப்படும்.

மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாறிய கல்வி:
மாநில பட்டியலில் இருந்த கல்வி பொது பட்டியலில் மாறியதற்கும், புதிய உலகச் சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் ஆளுநர் நடத்தும் கருத்தரங்கிற்கும் தொடர்புகள் உள்ளன. தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த கருத்தரங்கம் நடத்தப்பப்படுகிறது. காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர் கல்வியை மாற்றி அமைக்க, தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலில் மாறியதால் வந்த பிரச்னையின் தொடர்ச்சியாக இதனைப் பார்க்கலாம்.
இந்தியாவில், எமர்ஜென்சி காலத்தில், 1975 முதல் 1977 வரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பல சட்டங்கள் மத்திய அரசுக்கு பகிரப்பட்டன. அந்த வகையில், காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகிய 5 முக்கிய துறைகள் 1976ல் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இதனால், தான் நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை மத்திய அரசு அமல்படுத்துகிறது. 45 ஆண்டுகள் ஆன பிறகும் கூட கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் முயற்சியை மாநில அரசுகள் மறைந்து போயின. சரண் சிங் இருக்கும் போதும் சரி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணியில் இருந்த போதும் சரி, மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற திமுகவும் அதிமுகவும் முயற்சிகளை எடுக்கவில்லை. இதில், திமுக, அதிமுகவை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. மாநில உரிமைகளை மீட்பதாக பேசும், நிதிஷ் குமார், ஜெகன் மோகன் ரெட்டி, சந்திர சேகரராவ், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட தேசிய அளவில் செல்வாக்கு செலுத்தும் மாநில தலைவர்கள் கூட இதுபற்றிய அக்கறை இன்றி தான் உள்ளார்கள்.

கொள்கை முடிவை ஆளுநர் எடுக்க முடியுமா?
கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்யும் போது, அதில் மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்க, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அதே போல, மாநில அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் தொடரும் அதிகாரமும் சட்டத்தில் உள்ளது. அதை மீட்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இது அடிப்படையில் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். அதாவது, புதிய உலகச் சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் விவாதிக்கும் விஷயம் அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். அதனை ஆளுநரால் நேரடியாக எடுக்க முடியாது.

எனவே, கொள்கை முடிவுகள் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய இடத்தை நோக்கி தமிழ்நாடு அரசு நகர்ந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், கல்வியில் மாநில உரிமைகளுக்கான அடிப்படை கட்டுமானத்தையே மாற்றி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு

Web Editor

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் விதிமீறல்; நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி

EZHILARASAN D

தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் நிலை குறித்து ஆய்வு- விஜய் சம்ப்லா

G SaravanaKumar