“குஜராத் சட்டசபை போல நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது” -மாணிக்கம் தாகூர் எம்.பி

குஜராத் சட்டசபை போல நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இது குறித்து நியூஸ் 7 தமிழ் கேள்வி நேரம் பகுதியில் அவர் பேசியதாவது, “இந்த சட்ட முன்வடிவு…

குஜராத் சட்டசபை போல நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து நியூஸ் 7 தமிழ் கேள்வி நேரம் பகுதியில் அவர் பேசியதாவது, “இந்த சட்ட முன்வடிவு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட விதம் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. மக்களவை உறுப்பினர்களுக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு இந்த சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 12.30 மணிக்கு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஏற்பட்ட அமளிக்கு பின்னர் மீண்டும் அவை கூடிய நிலையில் பிற்பகல் 2.45மணிக்கு சட்ட அமைச்சர் இதனை நிறைவேற்றுவதற்கான மசோதாவை கொண்டு வந்தார்.

மசோதா நிறைவேற்றப்படுவதற்கு போதிய நேரம் வழங்கப்படாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. துரித உணவுவை போல மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜகவுடன் நண்பர்களாக உள்ள ஓய்எஸ்ஆர் அவை உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

குஜராத் சட்டமன்றத்தில் எப்படி பாஜகவினர் சட்டங்களை நிறைவேற்றுகிறார்களோ அதேபோல நாடாளுமன்றத்திலும் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. இது ஜனநாயக படுகொலை. கடும் அமளி ஏற்படும்போதும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவை நிறைவேற்றிவிட்டு தற்போது, “இது போலி வாக்காளர்களை கட்டுப்படுத்தவே” என்று கூறுவது வியப்பாக உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா பொறுப்பேற்றதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை கெட்டுப்போய்விட்டது. பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு கிளர்க் பேசினால் கூட இவர் போய் ஆஜராகவேண்டிய நிலையில்தான் உள்ளார்.

ஆதார் திட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்த முதலமைச்சர்களில் மோடியும் ஒருவர். தனிநபர்களுக்கான அரசாங்க சலுகைகளை கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஆவணம்தான் ஆதார். இதற்கும் குடியுரிமைக்கும் தொடர்பு கிடையாது.

யார் வேண்டுமானாலும் ஆதார் பெறலாம். ஆனால் குடியுரிமை பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே ஓட்டு போட முடியும். இப்படியான ஆதார் சட்டங்களை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்படும்போது சொல்லப்படுகிற “போலி வாக்காளர்களை நீக்கிவிடலாம்” என்ற வாதத்தின் மீது கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது, “நாங்கள் போலி வாக்காளர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு நீக்கி வருகிறோம். போலி வாக்காளர்களே இல்லை.” என்பதுதான். ஆனால் நாடாளுமன்றத்தில் இதற்கு எதிரான வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படியெனில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறதா? தேர்தல் ஆணையம் அவர்களுடைய பணியில் தோல்வியடைந்துள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது.

கடந்த 2019ல் தெலங்கானாவில் 7.8 கோடி வாக்காளர்களின் ஆதார் தகவல்கள் வெளியில் கசிந்தன. இதன் மூலம் வாக்காளர்களை அடையாளப்படுத்த முடியும். ஆளும் கட்சிகள் இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்ளும். எனவேதான் நாங்கள் இதனை உறுதியாக எதிர்க்கிறோம்.” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.