நீட் என்னும் தடைக்கல் தூக்கி எறியப்படும்: மு.க ஸ்டாலின்

நீட் என்ற தடைக்கல்லும் தூக்கியெறியப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் நடத்திய கல்வி கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் கல்வி என்ற…

நீட் என்ற தடைக்கல்லும் தூக்கியெறியப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் நடத்திய கல்வி கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் கல்வி என்ற முன்னெடுப்பை முதன்முதலில் செயல்படுத்தியது தமிழ்நாடுதான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டை உயர்கல்வியில் முன்னேறிய மாநிலம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

தொழிற்கல்விப் படிப்புகள் அனைவருக்கும் சென்றுசேரப் பெரும் தடைக்கல்லாக இருந்த நுழைவுத்தேர்வு முறையை நீக்கினார். அந்த வகையில், நீட் என்ற தடைக்கல்லும் தூக்கியெறியப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டுக் கல்வி முறையை குலைக்க, ‘புதிய கல்விக் கொள்கை’ மீண்டும் கொண்டு வரப்படுறது. கல்விச் சாலைகளில் வெறுப்புணர்ச்சிக்கு வித்திட்டு, இளம் பருவத்திலேயே மாணவர்களின் நெஞ்சில் மதவாத சக்திகள் நஞ்சைக் கலக்கின்றன.

கல்வி என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உரிமை என்றும், அதை ஒன்றியத்தில் உள்ள ஓர் ஆட்சியின் கட்சி, ஆக்கிரமித்துச் சீரழிக்க நினைப்பது, இந்த நாட்டின் உயிர்க்காற்றைப் பறிப்பதற்கு சமம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.