வேங்கைவயல் விவகாரம்; 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் நாளேயே பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த…

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் நாளேயே பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை செய்து வந்த நிலையில் அவர்கள் 147 நபர்களிடம் இதுவரை விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைப்பதாக அறிவித்தது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சிபிசிஐடி போலீசார், தங்களுடைய விசாரணையில் 11 பேரை சந்தேகப்படுவதாகவும், அவர்களுடைய டிஎன்ஏவை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதற்கு நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தன.

இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று 11 பேர் இடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர், இறையூர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 11 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்காக, ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக, அந்த 11 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற உத்தரவை அனுப்பி இருந்தனர்.

இதில் பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழமுத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆகியோர் மட்டும் டிஎன்ஏ பரிசோதனை செய்த நிலையில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டும் சோதனைக்கு ஆஜராக விருப்பமில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி இளங்கோகவன், யார், யாரை எதற்கு ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற விவரத்தை சிபிசிஐடி விசாரணை அதிகாரி கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க வாய்ப்பளித்து கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

இந்த நிலையில், மீண்டும் சிபிசிஐடி போலீஸார் அந்த 8 பேருக்கும் ரத்த மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மனுமீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராகினர். அப்போது, ரத்த மாதிரி பரிசோதனை தொடர்பான சம்மனை 8 பேருக்கும் நீதிமன்றம் வழங்கியது.

இந்த நிலையில்தான், மீண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தில் ஆஜனரான எட்டு பேரிடம் நேற்று விசாரணை நடத்திய நீதிபதி, சிபிசிஐடி டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்படுவதற்கான அளித்த விளக்க கடிதத்தை அளித்தார். கடிதத்தை பெற்றுக் கொண்ட 8 நபர்களும் நீதிபதியிடம் கடிதம் ஆங்கிலத்தில் உள்ளது என்றும் இதை உடனடியாக எங்களுக்கு படிக்க தெரியாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட எட்டு நபர்களுக்கும் ஒருநாள் கால அவகாசம் கொடுத்து நாளை இதே நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜரான எட்டு பேரும் எழுத்துப்பூர்வமான விளக்கக் கடிதத்தை அளித்தனர். அதில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள தங்களுக்கு சம்மதம் இல்லை எனவும், தங்களது கோரிக்கை குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தது யார் என கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும், அதை விட்டு விட்டு தங்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும், வழக்கை இழுத்தடிப்பதற்காகவே இந்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும் , இது போன்ற டிஎன்ஏ பரிசோதனை உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை 4ஆம் தேதியான இன்றைக்கு ஒத்தி வைத்த நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 8 நபர்களும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 2வது நாளாக ஆஜராகினர். அப்போது வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும், ரத்த மாதிரியை பரிசோதனை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 8 பேருக்கும் நாளை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.