“உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பதால் பதில் கூற முடியாது”

பேரறிவாளன் விடுதலை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பதால் தன்னால் பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின்…

பேரறிவாளன் விடுதலை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பதால் தன்னால் பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை சார்பில் புத்தாக்க மையம் தொடக்க விழா நடைபெற்றது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் நடைபெற்ற இதனை, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் விளக்கங்கள் கேட்டறிந்ததோடு அவர்களை பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உலக அருங்காட்சியக தினத்தில் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானத்தை பழகக்கூடிய பல ஆராய்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாக கூறினார். பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல் கலாம் அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இது வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும் என்றும், இதன் மூலமாக எந்த பள்ளியில் படிக்கும் மாணவரும் எந்த ஒரு ஆராய்ச்சியையும் செய்யலாம் என கூறினார். புதுச்சேரி அரசும் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்து செய்யும் ஒரு புதிய முயற்சி இது என்றும் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மக்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் எனவும் தெரிவித்தார்.

 

குப்பைகளை அகற்ற மாணவர்கள் ஒரு ரோபோ கண்டுபிடித்திருக்கிறார்கள், குப்பைகள் இல்லா புதுச்சேரியாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து குப்பைகள் இல்லாத புதுச்சேரியாக மாற்றும் வகையில் விஞ்ஞானபூர்வமாக பல நடவடிக்கைகளை எடுக்க இந்நிகழ்வில் ஆலோசனை கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

 

பின்னர் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பதால் பேரறிவாளன் விடுதலை குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என மலுப்பலாக தமிழிசை செந்தரராஜன் பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.