திமுக, அதிமுகவுக்கு மாற்று, தேமுதிக தான் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் திருமண விழாவில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு விஜயகாந்த் வருவார் என தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே, அதிமுக கூட்டணி குறித்து பேசப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதால் அவரவர் பணியை செய்து வருவதாகவும், தனித்து நிற்கவும் பயமில்லை என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக தான் என்றும், தேமுதிக கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சட்டமன்றத்தில் தேமுதிகவின் குரல் அதிகம் ஒலிக்கும் என்று கூறியுள்ளார். கேப்டனை போன்று ஊழலையும் வறுமையையும் ஒழிப்பேன் என எந்தத் தலைவராலும் சொல்ல முடியாது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ‘அதிமுகவில் நிறைய குழப்பங்கள் உள்ளது. கட்சிக்குள் இருப்பது குறித்து அவர்கள்தான் அதை முடிவு செய்யவேண்டும். சசிகலா பூரண குணமடைந்து தமிழகம் திரும்ப வேண்டும். தனித்து நிற்கவும் பயமில்லை; கூட்டணியோடு போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்’ என கூறியுள்ளார்.







