“டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் எனக் கருதி அதிமுக வெளிநடப்பு” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

“டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் எனக் கருதி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது”  என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட…

“டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் எனக் கருதி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது”  என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13-ஆம் தேதி திருப்பி அனுப்பினார்.  இதில், பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே,  சில மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,  இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக,  தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்பட்டது.  இந்த கூட்டத்தில்,  10 மசோதாக்காளை நிறைவேற்றுவதான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது..

”இன்று ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.  இது குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.  ஆளுநரின் நடவடிக்கைகள் சட்ட பேரவை மாண்புக்கும் இறையாண்மைக்கும் எதிராக உள்ளது.

இந்த விவாதத்தில் இறுதியாக பேசிய எதிர்கட்சி தலைவர் தன் கருத்துகளை தெரிவித்தார். வெளிநடப்பு செய்வதற்கு வேண்டும் என்றே வலிந்து ஒரு காரணத்தை தேடி கண்டுபிடித்து வெளிநடப்பு செய்து உள்ளனர்.  இந்த தீர்மானம் நிறைவேற்றும் போது இருக்க கூடாது என்பதற்காக கண்டுபிடித்துக்கொண்டு வெளிநடப்பு செய்துள்ளனர்

தமிழ்நாடு மீன் வள பல்கலைகழகம் 2012 இல் உருவாக்கப்பட்டது.  2020 ஜனவரில் 9 ல் சட்ட முன்வடிவை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து, டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் என பெயர் மாற்றம் செய்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மீன் வள பல்கலைக்கழகத்திற்கு இல்லாமல் சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது என்று சொல்லி வெளி நடப்பு செய்தார்.

தமிழ்நாடு மீன் வள பல்கலைகழகம் 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதன்முறையாக உருவாக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.  அப்போது அது வெறும் மீன் வள பல்கலைகழகம்  9-ம் தேதி ஜனவரி  2020 ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சூட்டினார்.

இந்த சட்ட முன் வடிவு ஆளுநருக்கு 2020 ஆம் ஆண்டில் அனுப்பி வைக்கப்பட்டது.  ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.  ஆளுநர் பரிசீலனையில் தான் வைத்து இருந்தார்.  அந்த ஓராண்டு காலம் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதன் பின் திமுக பொறுப்பு ஏற்ற பின் ஆளுநர் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு பதில் முதலமைச்சர் நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தோம்.

ஆளுநர் 2020 ஆம் ஆண்டில் அதிமுக பெயர் மாற்றம் செய்ய சொன்னதும்,  இப்போது துணைவேந்தர் நியமனம் குறித்து அனுப்பிய மசோதாவையும் சேர்த்துதான் ஆளுநர் திருப்பி அனுப்பினார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டு மசோதாக்களையும் எந்த மாறுதலும் இல்லாமல் மீண்டும் தான் நிறைவேற்ற வைத்து உள்ளார்.

இந்த மசோதாக்களை  உடன் இருந்து வரவேற்று இருக்க வேண்டிய அதிமுகவினர் வெளி நடப்பு செய்து விட்டார்கள்.  இது முழுக்க முழுக்க அரசியல்.  பாஜக அதிமுக இடையே ரகசிய தொடர்பு உள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.  நாம் ஏதாவது சொல்லி விட்டால் டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் என்று தான் வெளி நடப்பு செய்து உள்ளார்கள்.

மசோதாக்களை நிறுத்தி மட்டும் ஆளுநர் வைக்கவில்லை,  நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி உள்ளதால் அதை ஆளுநர் நிராகரிக்கிறார் என்று தான் அர்த்தம். நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.