என்எல்சி நிர்வாகம் பயிரை அழித்ததில் எனக்கு ஒப்புதல் கிடையாது, நிலத்தை கையகப்படுத்தியதால் பயிர் செய்யக்கூடாது என கூறியிருக்க வேண்டும். பயிரிட்ட பிறகு வளர்ந்த பயிரை அழிக்கக்கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இன்று வருகை தந்தார். சித்சபையில் வீற்றுள்ள சிவகாமிசுந்தரி சமேத நடராஜப்பெருமானையும், அருகே உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் கோயில் சன்னதியிலும் சாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம் கீழசன்னதியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.மருதை, மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வே.ராஜரத்தினம், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியன், ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகோபி, நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சால்வை அளித்து வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
“என்எல்சி நிர்வாகம் பயிரை அழித்ததில் எனக்கு ஒப்புதல் கிடையாது. பயிர் உயிருக்கு சமம். நிர்வாக ரீதியாக 10 ஆண்டுகளாக இடைவெளியை ஏன் அனுமதித்தார்கள். அதற்கு அனுமதிக்கப்பட்டு பயிர்கள் வளர்க்கப்பட்டு அறுவடை முடியும் வரை நிர்வாகம் காத்திருக்கலாம். நெய்வேலி நிர்வாகம் ஏற்கனவே நாங்கள் இந்த நிலங்களை கையக்கப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது.அமைச்சர் பயிரிக்கூடாது என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் என கூறுகிறார்.
இதில் எங்கே இடைவெளி ஏற்பட்டது என தெரியவில்லை. நிலத்தை கையகப்படுத்தியதால் பயிர் செய்யக்கூடாது என கூறியிருக்க வேண்டும். பயிரிட்ட பிறகு வளர்ந்த பயிரை அழிக்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அதுதான். நிர்வாக ரீதியாக அரசாங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏன் இந்த இடைவெளி இருந்தது. பயிர் வளர்ந்த பிறகு அழிப்பதை விட, பயிரிடும் போதே நிர்வாக ரீதியாக தடுத்திருக்கலாம்” இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.







