ஒகேனக்கலுக்கு வரும் நீரில் அளவு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரியில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அரசு போக்கு காட்டியது. இந்நிலையில் காவிரி நீரிபிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம் வயநாட்டில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு உயர்ந்தது.
இதனையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 20,000 கனஅடி வரை நீர் வந்தது. பின்னர் இந்த நீர் வரத்து மீண்டும் படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்நிலையில் இன்று மேலும் நீர்வரத்து குறைந்ததை அடுத்து, கர்நாடகா தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுவில் மதியம் 12 மணி நிலவரப்படி நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.







