தமிழ்நாட்டில் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேறாது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட
முகாமினை பார்வையிட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” இந்திய துணைக்கண்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, அரிசி
உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. விலை ஏற்றத்திற்கு மத்திய அரசுதான் காரணம். பெட்ரோல் டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தியது தான் இதற்கு மூல காரணம்.

பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள யாத்திரை பாத யாத்திரை இல்லை பாவ யாத்திரைதான். பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது அங்கு நடந்த கலவரத்தை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இது தேசிய அவமானம் என்று கூறினார். இப்போது தேர்தலை முன்னிட்டு மணிப்பூரில் பிரிவினையை கட்டவிழ்த்துவிட்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மத்திய அமைச்சர்கள் வரும் தேர்தல் 80 க்கும் 20க்கும் ஆன தேர்தல் என்று கூறி சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த அச்சத்தை அரசியல் ரீதியில் கட்டமைக்க முடியுமா என்ற உள்நோக்கத்தோடு நடக்கும் இந்த யாத்திரை பாவ யாத்திரை தான். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமே இல்லை.

திமுக வை விமர்சிக்க பா.ஜ.க., வினருக்கு எந்த தகுதியும் இல்லை. ஏனென்றால் இவர்கள் மக்களை ஒற்றுமைபடுத்த எந்த முயற்சியும் எடுத்தது இல்லை. இவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர் நலனுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டவர்கள். தமிழ்நாட்டில் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேறாது” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.







