96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் ஆந்திரா, ஒடிசாவிற்கான சட்டமன்றத் தேர்தலும் இன்று காலை ஆரம்பித்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம்…

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் ஆந்திரா, ஒடிசாவிற்கான சட்டமன்றத் தேர்தலும் இன்று காலை ஆரம்பித்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 13) காலை 7 மணிக்கு தொடங்கியது. 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியம் பிரதேசம் என மொத்தம் 96 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீர் (1) என மொத்தம் 96 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதேபோல், ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒடிஸாவில் முதல் கட்டமாக 4 மக்களவைத் தொகுதிகளுடன் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய 4ம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4ம் கட்ட மக்களவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, வரும் மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.