முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்–யாரை நிறுத்தப் போகிறது பாஜக?


பால. மோகன்தாஸ்

கட்டுரையாளர்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இனி தங்கள் வேட்பாளர் யார் என்பதை ஆளும் கூட்டணியும், எதிர்க்கூட்டணியும்தான் அறிவிக்க வேண்டும்.  

குடியரசு துணைத் தலைவரின் முக்கியத்துவம்: 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவருக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த இரண்டாம் இடம், குடியரசு துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, குடியரசு துணைத் தலைவர்தான் மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவர். எனவே, மாநிலங்களவையை திறம்பட நடத்துவதற்கான திறமை கொண்டவராக குடியரசு துணைத் தலைவர் இருப்பது அவசியம்.

வாக்காளர்களும் வாக்கு மதிப்பும்:

குடியரசு துணைத் தலைவர் தேர்தலின் வாக்காளர்கள் எம்பிக்கள் மட்டுமே. குடியரசுத் தலைவர் தேர்தலைப் போல், இதில் எம்எல்ஏக்கள் ஓட்டு போட முடியாது. இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான், தேர்தலில் வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு. மக்களவை உறுப்பினர்களாக இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான மதிப்பு கொண்டதாக அந்த வாக்கு இருக்கும். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற விதி, ஆளும் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் அம்சம்.

 

ஆளும் கூட்டணியின் பலம்:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் 336 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 117 உறுப்பினர்கள் என மொத்தம் 453 பேர் இருக்கிறார்கள். குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கு இந்த பலமே தேவைக்கும் அதிகமானது. இதோடு, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நட்புக் கட்சிகள் பல இருக்கின்றன. எனவே, ஆளும் கூட்டணி வேட்பாளரின் வெற்றியை தடுக்கும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

யாரை நிறுத்தும் பாஜக:

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக யாரை நிறுத்தும் என்பதுதான் தற்போது நாட்டின் மிக முக்கிய பேசுபொருளாக உள்ளது.

 

இது தொடர்பாக கடந்த வாரம் 21ம் தேதி, பாஜக சார்பில் டெல்லியில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கூடுவதற்கு முன்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகிய 3 பேரும், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவை சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.

அவர்கள் வெங்கைய்யா நாயுடுவிடம் என்ன கூறினார்கள்; அவர் அவர்களிடம் என்ன கூறினார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

வெங்கைய்யா நாயுடு ஆர்வம்: 

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வெங்கைய்யா நாயுடு ஆர்வமாக இருந்ததாகவும், வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் மிகுந்த அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், அந்த அதிருப்தியில் இருந்து அவர் தற்போது மீண்டுவிட்டார் என்றும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமானால் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

மாற்று வேட்பாளர்கள் குறித்து சிந்திக்கும் பாஜக:

வெங்கைய்யா நாயுடுவின் ஆர்வம் குறித்து அறிந்து கொண்ட பாஜக, மாற்று வேட்பாளர்கள் குறித்தும் சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் பெயர்களும் பாஜகவின் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசுத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுவிட்டதால், நிர்மலா சீதாராமனுக்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. அதோடு, நிதி அமைச்சர் எனும் முக்கிய பொறுப்பில் இருப்பதோடு, பல்வேறு முக்கிய அமைச்சரவைக் குழுக்களிலும் அங்கம் வகித்து வருவதால் அவரை மாற்ற வேண்டாம் என பாஜக கருதுவதாகவும் கூறப்படுகிறது.

சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?:

இம்முறை குடியரசு தணைத் தலைவர் பதவியை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுப்பது குறித்தும் பாஜக பரிசீலித்து வருகிறது. இதன் காரணமாகவே, முக்தர் அப்பாஸ் நக்வி, ஆரிப் முகம்மது கான், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவடேகரும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சராக இருந்த அவர், பதவி விலகி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிறது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமே இருந்து வருகிறார். தற்போது அவர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிற்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கான போட்டியில், வெங்கைய்யா நாயுடு, நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, ஆரிப் முகம்மது கான், ஹர்தீப் சிங் பூரி, பிரகாஷ் ஜவடேகர் என பலர் இருந்தாலும், வெங்கைய்யா நாயுடுவுக்கே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிவு பிரதமர் மோடியின் கையில்: 

பல கட்ட ஆலோசனை, பல மட்ட ஆலோசனை என இருந்தாலும், இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி என்ன நினைக்கிறார் என்பதுதான் பாஜகவில் தற்போது மிகவும் முக்கியம். அவர் நிறுத்த நினைப்பது இந்த மூவரில் ஒருவராக இருக்கலாம் அல்லது யாரும் நினைத்துப் பார்க்காத ஒருவராகவும் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள காத்திருக்கத்தான் வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூரி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

G SaravanaKumar

உடைந்த கண்ணாடியா ஓபிஎஸ் – இபிஎஸ் உறவு? மனங்கள் ஏன் இணையவில்லை?

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

Janani