ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2-வது நாள் மாநாடு தொடங்கியது!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.

முதலமைச்சர் விஜய் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது, “மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பை 100% உறுதிபடுத்த வேண்டும்; அதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. பெண்களின் பாதுகாப்பிற்காக உரிய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும். எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு 2-வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் மாநாட்டில் அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் முடிவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவிக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.