தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 போ், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதவுள்ளனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்கிரைப்) சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபடவுள்ளனா்.
தோ்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக் கூடாது என்றும் இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொதுத் தோ்வு தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்துகள், சந்தேகங்கள் குறித்து அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தோ்வு வினாத்தாள்கள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வுக்குரிய வினாத்தாள்கள் குறித்த புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களை மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு முதல் தோ்வாக தமிழ் பாடத்துக்கான தோ்வு இன்று நடைபெறுகிறது.







