அதனால்தான் அவர் கர்மவீரர்.. – கல்வி முதல் அரசியல் வரை கிங் மேக்கராக திகழ்ந்த காமராஜர்..!!

கல்வி முதல் அரசியல் வரை பெரும் புரட்சிகளை நிகழ்த்தி இந்திய அரசியலில் கிங் மேக்கராக வாழ்ந்த கர்மவீரர் காமராஜரைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. மாடு மேய்த்துக் கொண்டிருந்த 12வயது சிறுவனிடம் ”எலே…

கல்வி முதல் அரசியல் வரை பெரும் புரட்சிகளை நிகழ்த்தி இந்திய அரசியலில் கிங் மேக்கராக வாழ்ந்த கர்மவீரர் காமராஜரைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

மாடு மேய்த்துக் கொண்டிருந்த 12வயது சிறுவனிடம் ”எலே தம்பி பள்ளிக்கூடம் போகலயா.. மாடு மேய்க்கிறியே என்ன விசயம்..,” என அந்த மனிதர் கேட்க பள்ளிக் கூடம் போனால் கஞ்சி யார் ஊத்துறதுங்கய்யா..? என அந்தச் சிறுவன் பதிலளித்திருக்கான். அப்ப கஞ்சி ஊத்துனா நீ பள்ளிக்கூடம் போவீயாலே.. என அந்த மனிதர் மறு கேள்வியை கேட்க.. ம்ம்.. போவேனே.. என உற்சாகத்தோடு பதிலளித்திருக்கான்.

இந்தக் கணத்தில் இருந்துதான் காமராஜர் தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்திற்கான தொடக்கப் புள்ளியை வைத்தார் என காமராஜரை பற்றிய கதை ஒன்று உண்டு. கல்விக்கு அவர் ஆற்றிய பெரும் தொண்டு காலத்திற்கும் அழியாத கர்ம வீரர் எனும் முன்னொட்டை அவருக்கு வழங்கியது. அதனால்தான் அவர்  எளிய மனிதர்கள் கொண்டாடும் மக்கள் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

பிறப்பும் – கல்வியும் ..!! :

1903 ஆம் ஆண்டு ஜீலை 15 ஆம் தேதி  குமாரசாமி – சிவகாமி தம்பதிக்கு பிறந்தார் காமராஜர்.  ஆசையாய் பிறந்த பிள்ளைக்கு அவர்கள் குலதெய்வத்தின்  பெயரான ”காமாட்சி” எனும்  பெயரை சூட்டி மகிழ்ந்தனர். நாளடைவில் அவரது தாய் செல்லமாக “ராசா” என அழைத்து வந்ததால்  காமாட்சியும் ராஜாவும் இணைந்து “காமராஜர்” என்று அறியப்பட்டது.  வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பெயராக மாறியது. குமாரசாமி – சிவகாமி தம்பதிக்கு மட்டுமே அறிமுகமான பெயரை “கர்ம வீரர் – காமராஜர்” என தமிழ்நாட்டை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவும் சுவீகரித்துக் கொண்டது.

இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்த காமராஜரால் பள்ளி படிப்பை தொடங்க முடியவில்லை. ஆறாம் வகுப்பு மட்டுமே படித்தார்.  குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சுதந்திர போராட்டம் கொளுந்து விட்டெரியும் காலகட்டம் அது. வ.ஊ.சி மற்றும் பாரதியாரின் அரசியல் முழக்கங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

 பேச்சிலிருந்து செயலுக்கு தகவமைத்து கொண்டவர் :

காமராஜர் அரசியல் மீதும் சுதந்திர போராட்ட எழுச்சியின் மீதும் அதீத ஆர்வம் கொண்டதால் தன்னை தனது 18ம் வயதில் சுதந்திர போராட்ட இயக்கமான காங்கிரசில் இணைத்துக் கொண்டு ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1919 ஆண்டு பஞ்சாபில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக எழுந்த மக்கள் கிளர்ச்சியை அடக்க வெள்ளையர்கள் துப்பாக்கி ரவைகளுக்கு அப்பாவி மக்களை இரையாகினர். இந்த செய்தி காமராஜரின் அரசியல் பிரவேசத்திற்கு  வித்திட்டது. சுதந்திர போராட்ட எழுச்சியின் தலைவர்களின் உரைகள் மக்களை எழுச்சியூட்டின , சுதந்திர தாகத்திற்கு அவை தீணி போட்டன. அந்த உரைகளினால் கவரப்பட்ட காமராஜர் தன்னை இந்திய சுதந்திர போராட்ட அமைப்புக்கு ஒப்புக் கொடுத்தார்.

உரைகளை கேட்டு தன்னுள் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திக் கொண்ட காமராஜர் காந்தி முன்னெடுத்த ஒத்துழியாமை இயக்கத்தை தொடர்ந்து உப்பு சத்தியாகிரக போராட்டத்திலும் பங்கெடுத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதான் காமராஜரின் முதல் சிறைவாசமாகும். ஏறத்தாழ இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட காமராஜர் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில்  1931ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.

காந்தி, பெரியார், நேரு போன்ற தலைவர்களுடன் காமராஜர்..!!

தனது பதின்ம வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த காமராஜர் அடுத்த  இரண்டு ஆண்டுகளிலேயே காந்தியைச் சந்தித்தார்.  சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுத்து சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த காந்தி  மதுரைக்கு வருகை தந்தார். மதுரையில் வைத்துத்தான் காந்தியை காமராஜர் முதன் முதலில்  சந்தித்தார். லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாடு தோல்வியை தழுவியதால காந்தி வெளிநடப்பு செய்தார். காந்தியின் வெளியேற்றத்தால் போராட்டம் வெடித்து விடும் என அச்சப்பட்ட ஆங்கிலேயர்கள் முக்கியமான தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது. அதன்படி காமராஜர் வேலூரில் கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப காலத்தில் பெரியார் காங்கிரசிலே இருந்தபோது சாத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டிலே பெரியார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அக்கூட்டத்தில் காமராஜர் ஒரு தொண்டராக கலந்து கொண்டார். அதேபோல கேரளா வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தனது தாய் மாமா கடையிலேதான்  பணியாற்றிக் கொண்டிருந்த காமராஜர் அப்போராட்டத்தில் ஒரு பார்வையாளனாக கலந்து கொண்டார்.

காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த நேரம் அது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்தார். வெகுண்டெழுந்த காமராஜர் ராஜாஜியின் குலக் கல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். இதனையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்கிற போட்டி நிலவியது. காமராஜரே அடுத்த முதல்வர் என காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்கள் முன்மொழிய குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு ராஜாஜியே முதல்-அமைச்சராக தொடரட்டும் என்றார் காமராஜர். காமராஜர் முதல்-அமைச்சராக வந்தால்தான், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு காலம் உண்டு என பெரியார் முன்மொழிந்து அதனை காமராஜரிடமே வலியிறுத்தினார்.

காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்று விடுதலை நாளேட்டில், காமராஜர் ஆட்சியை வரவேற்று ஒரு பெரிய தலையங்கத்தை எழுதினார் பெரியார். “ சாதியை ஒழிப்பதற்கு இது நல்ல தருணம். காமராஜர் முதல்-அமைச்சராகி இருக்கிறார். இவருக்கு சாதியை ஒழிப்பதில் தனி அக்கறை உண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றி பல தடவை பேசியிருக்கிறார்” என காமராஜரை புகழ்ந்திருந்தார் பெரியார்.

1927ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 43ஆவது வருடாந்திர மாநாட்டில்தான் நேருவை முதன் முதலாக சந்தித்தார் காமராஜர். நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்தவர் காமராஜர். சைமன் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை திரட்டிப் போராடிய நிகழ்வு காமராஜரின் ஆளுமை திறனை நேரு அங்கீகரிக்க காரணமாக இருந்தது. அவர் 1964-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். இப்பொறுப்பில் 1967 வரை பதவி வகித்து, மூன்று முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த பெருமை இவருக்கு உண்டு. சோதனையான சூழலில் நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் பிரதமராகத் தேர்வுசெய்து, தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார்.

முதலமைச்சராக – பிரதமர் வேட்பாளராக காமராஜர்..!! :

1952ஆம் ஆண்டில் ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த முதல் மக்களவை பொதுத்தேர்தலில் காமராஜருக்கு 46.77 வாக்குகளும் ஜி.டி. நாயுடுவுக்கு 34.73 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.இதன் மூலம் காமராஜர் வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். தனது முதல் அமைச்சரவையில் முதல்வருக்கான தேர்வில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஜாஜியின் ஆதரவாளர்  சி. சுப்பிரமணியத்திற்கு நிதியமைச்சர் பதவியைக் வழங்கினார் காமராஜர்.

பிரதமராக இருந்த ஜஹவர்லால் நேரு மறைவின் போது நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது.  காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் அகில இந்திய அளவில் செல்வாக்கு பெற்ற தலைவராகவும் இருந்தார் காமராஜர். காமராஜர் நினைத்திருந்தால் அந்தப் பதவியை பெற்றிருக்க முடியும். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக 1964-ல் லால் பகதூர் சாஸ்திரியை நேருவுக்குப் பின் பிரதமராக்கினார் காமராஜார். 2 ஆண்டுகள்தான் லால்பக்தூர் சாஸ்திரி, பிரதமர் பதவியில் நீடித்தார். 1966-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி மறைந்தார். அவருக்கு அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. அப்போதும் காமராஜரை நோக்கியே அனைவரது பார்வையும் இருந்தது. அந்த நேரத்திலும் பிரதமராவதற்கான தகுதி காமராஜருகு இருந்தது. ஆனால் நேருவின் மகளான இந்திரா காந்தியை பிரதமராக்கினார் காமராஜர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காமராஜரின் K-Plan :

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உட்பூசல் அதிகரிக்கத் தொடங்கியது. ஒற்றுமையின்மை, சரியான திட்டமிடல் ஆகியவற்றால் காங்கிரஸ் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களை படுதோல்வி அடைந்தது. அப்போது கட்சியை புத்தாக்கம் செய்ய காமராஜர் முன்வைத்த திட்டமே கே-திட்டம். 1963ஆம் ஆண்டில் ஹைதராபாதில் நடந்த கட்சி மாநாட்டில் பேசிய காமராஜர் தனது கே-திட்டத்தினை முன்வைத்தார்.  ”ஆட்சியும் அதிகாரமும் கட்சியில் உள்ள எந்தவொரு தனி நபரின் சொத்தாக இருக்கக் கூடாது. அந்த வகையில், எந்தவொரு தனி நபரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பதவியிலும் தொடருவது கட்சிக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை”  என காமராஜர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் முழு நேரத்தை செலவிட்டு கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தப்போவதாக காமராஜர் தெரிவித்தார். கே-திட்டம், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். காமராஜரின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அடுத்த இரு வாரங்களில் காங்கிரசை சார்ந்த ஆளும் மத்திய, மாநில அரசுகளில் யாரெல்லாம் பதவி விலகுவார்கள், கட்சியை வலுப்படுத்துவார்கள் என்ற பட்டியலை வெளியிட்டார் நேரு.

அதன் விளைவாக, அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி (உள்துறை), மொரார்ஜி தேசாய் (நிதித்துறை), ஜெகஜீவன் ராம் (அஞ்சல் துறை), எஸ்.கே. பாட்டீல் (உணவுத்துறை), கோபால் ரெட்டி (வானொலி ஒலிபரப்பு), ஸ்ரீ மாலி (கல்வி) மற்றும் மாநிலத்தில் முதல்வர்களாக இருந்த காமராஜ் (தமிழ்நாடு), பட்நாயக் (ஒரிசா), சி.பி. குப்தா (உத்தர பிரதேசம்), பினோதானந்த்ஜா (பிஹார்), மந்த்லாய் (மத்திய பிரதேசம்) ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு முழு நேர கட்சிப்பணிக்கு திரும்பினார்கள்.

காந்தி படுகொலையில் துடிதுடித்துப் போன காமராஜர் :

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில்தான் தனது முதல் சுதந்திர போராட்டத்தை துவங்கிய காமராஜர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் நாடுசுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி நாதுராம் கோட்சே எனும் இந்துத்துவ ஆதரவாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் படுகொலையின் செய்தி கேட்டு துடிதுடித்துப் போனார் காமராஜர்.

காமராஜரின் மதவாத எதிர்ப்பு :

1966-ம் ஆண்டு நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வலதுசாரிகள், சாமியார்கள் மற்றும் சங்கராச்சாரிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். டெல்லியில் சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த தீவிர மதவாத சிந்தனைக்கு எதிராக காமராஜர் பேசிய வார்த்தைகள் எக்காலத்திற்கும் பொருந்தும்படியாக உள்ளது. ” இவர்கள் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க” என அதிரடியாக பேசினார். காமராஜரின் பேச்சு இந்துத்துவ அரசியலை முன்னெடுப்போரை கலங்கடிக்கச் செய்தது.

இதனைத் தொடர்ந்து 1966-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி டெல்லியில் பசுவதை தடை சட்டத்தை ஆதரித்து நடத்தப்பட்ட  ஊர்வலத்தில் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. டெல்லி வீதிகள் பெரும் பதற்றத்தைக் கண்டன.  இந்துத்துவவாதிகள் சிலர் டெல்லி இல்லத்தில் காமராஜர் உறங்கி கொண்டிருந்த தருணத்தில் அவர் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர் வீட்டிற்கு தீவைத்தனர். காமராஜர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காமராஜரின் கொலை முயற்சியை பெரியார் மிகத் தீவிரமாக கண்டித்தார். “காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்”  என ஒரு நூலையே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜரின் இறுதி நிமிடங்கள்:

1975க்கு பிறகு காமராஜர் முதுமையின் காரணமாக உடல்நிலை குன்றினார். அந்த ஆண்டில் ஜூலை 15ம் தேதி தனது தனது 73-ஆவது பிறந்தநாள் விழாவை எளிமையாகக் கொண்டாடினார். உடல்நிலை குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்தார். அக்டோபர் 1ம்தேதி நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாள் அன்று அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டுத் திரும்பினார்.

மறுநாள் அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளன்று இயல்பாகவே இருந்துள்ளார். அன்று காலை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பிற்பகல் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டுத் சிறிது நேரம் தூங்கப் போனார். மாலை சுமார் 3.05 மணி அளவில் அவரது உடல் முழுவதும் வியர்த்துவிட்டது. காமராஜரின் அறையில் குளிர்சாதன பெட்டி இருந்தபோதும் அவருக்கு அளவுக்கு மீறி வியர்த்ததை கண்ட உதவியாளர்கள் மருத்துவர்களை அழைத்தனர்.

சிறிது நேரத்தில் காமராஜரின் உடம்பு சில்லிட்டிருந்ததால் அவரது உடம்பைத் துடைத்து, போர்வையால் போர்த்திவிட்டு, அறையிலிருந்து உதவியாளர்கள் வெளியேறியபோது, மருத்துவர்கள் வந்தால் எழுப்பு எனக் கூறி  விளக்கை அணைத்துவிட்டுப் போகச் சொன்னார். மருத்துவர்கள் வந்து பரிசோதித்தபோது காமராஜர் உயிர் பிரிந்திருந்தது. உடன் இருந்தோர் பீறிட்டு அழத் தொடங்கினர். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி காமராஜர் வீட்டிற்கு விரைந்தார்.

காமராஜரின் உயிரற்ற உடலை பார்த்து சிவாஜி கணேஷன் “போச்சே…போச்சே” கதறித் துடித்தபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி சிவாஜியை தேற்றினார். காந்தியின் அரசியலால் ஈர்க்கப்பட்ட காமராஜர் அவரது பிறந்த தினத்திலேயே தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். காந்தியவாதத்தின் கடைசித் தூண்களில் ஒன்று சரிந்ததாக பலர் இரங்கற்பா எழுதினர்.

காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் பொற்காலம்..?

ஏழை எளிய மக்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கில் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தது முதல் தமிழ்நாட்டில் பல அணைகள் கட்டியது வரை காமராஜரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன், திருச்சியில் பெல் நிறுவனம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை உருவாக்கியதில் காமராஜரின் பங்கு இன்றியமையாத ஒன்று.

தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இதன் பாதிப்பை உணர்ந்த காமராஜர் அப்போதைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்தார்.

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை கடுமையாக எதிர்த்த காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையாக குலக்கல்விமுறை ஒழித்தார். இலவசக் கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.