தமிழ்நாடு பட்ஜெட்டில் திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்.191ம் தேதி தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு தற்போது, தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ் படங்களின் படப்பிடிப்புகள். குறிப்பாக, பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாக திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரிய செய்கின்ற திட்டமிது. தமிழ் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.






