தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் டாஸ்மாக் மதுபான கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பார் மேலாளர் காயமடைந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பார் அருகே தள்ளுவண்டியில் சேட்டு என்பவர் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்.
தள்ளுவண்டியில் பிரியாணி விற்பவருக்கும், டாஸ்மாக் பார் மேலாளர் மாரிமுத்துவிற்கும் நேற்று மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சேட்டு நண்பர்கள் மகேந்திரன், மற்றும் கமால் பாஷா ஆகியோர் பார் மேலாளர் மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மாரிமுத்துவின் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கும்பகோணம் நகர மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.







